குருப் பெயர்ச்சிப் பொதுப் பலன்கள்!
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை (06.12.2008) சூரிய உதய நேரம் காலை 10.34 மணிக்கு, சுக்லபட்சம் நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாம கரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்தியோக வேளையில் பஞ்ச பட்சயில் மயில் அதம சாவு காணும் காலத்தில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.
15.12.2009 வரை மகர ராசியில் இருந்து அடுத்த ஒராண்டு காலத்திற்கு குரு பலன்களைத் தருவார்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானின் அருளில்லாமல் பிரபலமாக முடியாது. ஆளுமைத் திறனும், ஆழ்ந்த அறிவும் வேண்டுமென்றால் இவரின் அனுக்கிரகம் வேண்டும். உயர் ரக தங்க ஆபரணங்கள், அதிகப் பணம் புழங்கும் இடங்களில் எல்லாம் இவர் இருப்பார்.
தனது வாழ்க்கையில் அல்லல்களும், துயரமும் அடுத்தடுத்து வந்தபோதும் ஹரிச்சந்திரனைப் போல ஒருவர் உண்மையையே பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் குருவின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கிறார் என்று அர்த்தம்.
சகல வல்லமையும் பெற்ற குரு பகவான் நீச்சமாகி வலுவிழந்து அமர்வதால் உலககெங்கும் பணப்புழக்கம் குறையும். தங்கத்தின் விலையும் குறையும். நிலத்தின் விலைக் குறைந்தாலும் சிமெண்ட், மணல், கம்பி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.
வங்கிகளில் வராக் கடன்கள் அதிகரிக்கும். சில வங்கிகள் நிதி நெருக்குதலால் ஏற்படும் நட்டத்தின் காரணமாக இல்லாமல் போகும். பணவீக்கம் குறைந்நது கட்டுப்பாட்டிற்குள் வரும். தனியார் நிதி நிறுவனங்கள் தள்ளாடும். பருவம் மாறி மழைப் பொழியும். விவசாயம் பாதிக்கும்.
பணத்திற்காக எதையும் துணிந்து செய்யும் போக்குகள் அதிகரிக்கும். போலி மத குருமார்கள் அதிகரிப்பார்கள். சாதி, மதக் கலவரங்கள், தீவிரவாதம், இயற்கை சீற்றங்களால் ஏப்ரல் வரை நாடு தடுமாறும். நாட்டின் முக்கிய ரகசியங்கள் வெளியாகும். தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றியடையும். தேர்தலுக்கு பிறகு கூட்டணிகள் மாறும். எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காது. அதிசாரம் மற்றும் வக்ரகதியில் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குரு கும்பத்திற்கு செல்கிறார். அக்காலக்கட்டத்தில் தீவிரவாதத்தை ஓடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். விலைவாசி குறையும். அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் வரும். அமெரிக்காவுடன் நட்புறவு கெடும். இந்தியா புது அணு ஆயுதங்களை தயாரிக்கும். ஏவுகணைகளை உருவாக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பும். பாகிஸ்தானின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும். தன்னலம் கொண்ட தலைவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற கனிம, கரிம வளங்கள் கோதாவரி, காவேரி ஆற்றுப் படுகைகளில் கண்டுபிடிக்கப்படும். அரசு நிறுவனங்கள் நலிவடையும். நாட்டின் அயல் நாட்டுக் கடன் பலமடங்கு உயரும். அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவைப் பயன்படுத்தி முன்னேறும். பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்யும். வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். பணியாட்கள் கிடைப்பது அரிதாகும். போலிக் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கும். ஆராய்ச்சிப் படிப்பு (Ph.D) மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். கணிணி கல்வி மோகம் குறையும். கால்நடை வளர்ப்பு, விவசாயம், ஆரம்பக் கல்வி இவற்றை மேம்படுத்த அரசால் அதிக நிதி ஒதுக்கப்படும்.தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு மேம்படும். பாலியல் கல்வி மற்றும் அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். புது சாலைகள் அமைக்கப்படும். குரு பெயர்ச்சி ராசி பலன்கள்!