கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் முக்கியமாக 3 கட்சிகள் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற கட்சியின் சார்பில் தேவேகெளடாவின் மகன் குமாரசாமி, காங்கிரசின் சார்பில் எஸ்.எம் கிருஷ்ணா, பா.ஜ.க.வின் சார்பில் எடியூரப்பா என மூன்று பேர் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கர்நாடகத் தேர்தல் 10, 16, 22 ஆகியத் தேதிகளில் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
எடியூரப்பா பிறந்த தேதி பிப்ரவரி 27, 1943. பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும்போது இவர் அனுஷ நட்சத்திரம், விருட்சிக ராசி. சனிக்கிழமை பிறந்துள்ளார். சகட யோகத்தில் பிறந்திருக்கிறார். அதாவது ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். நூலிழையில் வாய்ப்பை இழப்பார் என்று சொல்வார்களே, அது போன்ற யோகம்.
சகட யோகம் இருந்தாலும், கொஞ்சம் காலம் கடந்துவிட்டதால் அதன் பாதிப்பு இருக்காது. அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளது.
1932ல் மே 1ஆம் தேதி எஸ்.எம். கிருஷ்ணா பிறந்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரம், காலையில் பிறந்திருந்தால் கும்ப ராசி, மாலையில் பிறந்திருந்தால் மீன ராசி. பூரட்டாதி நட்சத்திரம் ராஜ தந்திரத்திற்கு அடையாளம். அமைதியாக இருந்து கொண்டு காரியத்தை முடிப்பார்கள் என்று சொல்வார்களே, அதுபோன்றது.
இவரது ஜாதகத்தைப் பொருத்தவரை தேர்தல் இவருக்கு சுமாராக இருக்கும்.
அடுத்தது குமாரசாமி, 1959, டிசம்பர் 16.
திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. இவருக்கு குரு பலன் இருக்கிறது. மூவருக்குமே குரு பலன் இருக்கிறது.
திருவாதிரை என்றாலே தில்லு முல்லு திருவாதிரை என்று சொல்வார்கள். எட்ட வேண்டிய விஷயத்தை மட்டும்தான் பார்ப்பார்கள். போகும் வழி எப்படி இருக்கும் என்பதை பார்க்க மாட்டார்கள். இவருக்கு ராகு, கேது இருக்கும் இடம் சரியில்லை.
தற்போது போட்டி என்று எடுத்துக் கொண்டால் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் கிருஷ்ணாவிற்கும், அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் எடியூரப்பாவிற்கும்தான்.
ராகு, கேது தற்போது அனுஷத்திற்கு வெகு சிறப்பாக மாறியுள்ளது. எனவே எடியூரப்பாவை எதிர்பார்க்கலாம்.
தேர்தலின் ஒட்டு மொத்த முடிவு எப்படி இருக்கும்?
10, 16, 22 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதியை வைத்துப் பார்க்கும் போது எடியூரப்பாவிற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
25ஆம் தேதி தேர்தல் எண்ணிக்கை. அதுவும் பாஜகவிற்கே சாதகமாகவே உள்ளது.