Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வா‌ழ்‌க்கை‌த் துணை‌ப் ‌பி‌ரி‌ந்து செ‌ல்வத‌ற்கான காரண‌ம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

வா‌ழ்‌க்கை‌த் துணை‌ப் ‌பி‌ரி‌ந்து செ‌ல்வத‌ற்கான காரண‌ம்?
, புதன், 13 பிப்ரவரி 2008 (17:40 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும்போதே சரியாகப் பார்க்காமல் விட்டுவிடுவதே இதற்கு முக்கியக் காரணம். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கின்றனர். நட்சத்திரப் பொருத்தம் பார்த்தாலும், ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம்.

இதுமட்டுமல்லாமல், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஜாதகங்களை சிறு வயதிலேயே நல்ல ஜோதிடரிடம் அளித்து அதன் தன்மைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிள்ளையின் குணஸ்தானம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு சில ஜாதகருக்கு 21 வயதிலேயே திருமண யோகம் வந்துவிடும். எனவே பெற்றோர் அந்த வயதிலேயே நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிடுவது கண்ணியமாக இருக்கும். இல்லாவிட்டாலும் தானே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்துவிடும்.

மேலும் சிலருக்கு 32 வயதில்தான் திருமணம் நடக்கும் என்று இருக்கும். அவர்களுக்கு என்னத்தான் தேடினாலும் அப்போதுதான் நடக்கும். அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் கடுமையான தோஷங்கள், குணாதிபதி கெட்டுப்போதல், மாங்கல்யக்காரகன் கெட்டுப்போதல் போன்றவை இருக்கும்.

எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளின் ஜாதகம் பற்றி அறிந்து வைத்திருந்தால், எந்த காலக்கட்டத்தில் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வயதில் திருமணம் செய்யலாம், எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் குழப்பமிருக்காது.

சிலர் குடும்ப பின்னணியை பார்த்துத்தான் திருமணம் செய்கின்றனர். சிலருக்கு 7ஆம் இடம், 8ஆம் இடம் கடுமையாக இருந்து லக்னாதிபதியும் பலவீனமாக இருந்தால் திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் அவர்களைத் திட்டுவது போல் நீங்கள் பெண் எடுங்கள் என்று சொல்வோம். அதாவது, சொந்த வீடு வசதியாக இருக்கும் ஒருவர், வாடகை வீட்டில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்கு வருபவர்கள் அவர்களை என்ன இப்படி ஒரு வீட்டில் பெண் எடுத்திருக்கிறீர்களே? என்று திட்டுவார்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்கிறோம்.

அதாவது, ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும் அல்லது நம்மை விட சிறிது தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண் எடுத்தால் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது ஜாதக அமைப்பாகும்.

மாங்கல்ய ஸ்தானம், மனைவி ஸ்தானம் எல்லாம் பார்க்க வேண்டும். மேலும் 4ஆம் இடம் குணஸ்தானம், அதையும் பார்க்க வேண்டும். சில ஜாதகம் பார்த்தால் நட்சத்திரப் பொருத்தம் இருக்கும், ஜாதகப் பொருத்தம் இருக்கும். நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென பிரிவு ஏற்படும். இதற்கு அவர்களது தசா புக்திகளின் மாறுபாடே காரணம். மிகமோசமான தசா புக்தி வரும், இதனால் ஓடிப்போவது போன்றவை ஏற்படும். தசா புக்தியை மாற்ற இயலாது. ஆனால் பெண்ணுக்கு கெட்ட தசா புக்தி வரும்போது, ஆணுக்கு நல்ல தசா புக்தி நடந்தால் பெண்ணின் மனதை அது மாற்றி விடும்.

எனவே பொருத்தம் பார்க்கும்போது மோசமான தசைகள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ வருகிறதா என்பதைப் பார்த்து, அவ்வாறு வந்தால், எதிர்பாலருக்கு அதனை சமாளிக்கக் கூடிய தசா புக்தி வருகிறதா என்பதைப் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றையும் பார்த்து திருமணம் செய்தால் ஓடிப்போதல் போன்றவை ஏற்படாது.

அதில் மிக முக்கியமானது நடத்தை ஸ்தானம், ஒரு சிலர் அடிப்படையிலேயே கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களுக்கேற்றபடியான ஒரு ஜாதகத்தைப் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.

மனைவி ஓடிப் போவதற்கு ஆணின் ஆண்மைத் தன்மை குறைபாடு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பொதுவாக செவ்வாய் என்பது ரத்தத்துக்குரியது. 10 சொட்டு ரத்தம் சேர்த்து ஒரு விந்து உருவாகிறது. அப்போ ரத்தத்தின் தன்மை என்ன என்பதை பார்க்க வேண்டும். செவ்வாய், சுக்ரன் கிரகங்கள்தான் காமத்தை தூண்டக்கூடிய கிரகங்களாகும். இவை பகை வீட்டில் இருக்கிறதா, ஆட்சி வீட்டில் இருக்கிறதா, உச்சம் பெற்றுள்ளதா, நீச்சம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அது சேர்ந்த கிரகம் உள்ளிட்டவற்றையும் பார்த்தால் ஒரு ஆணின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

இதேபோன்றுதான் பெண்ணின் ஜாதகத்திலும் அவரது கர்ப்பப்பையின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

லக்னத்திற்கு 3ஆம் இடம்தான் போக ஸ்தானம். எனவே 3ஆம் இடம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கடுத்து சுக்ரன், செவ்வாய் எங்கு இருக்கிறது, எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சுக்ரன் நல்ல இடத்தில் இருந்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டுடன் வாழ்வார்கள்.

சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து, சனியும் சுக்ரனும் பார்த்துக் கொண்டால் அவர்கள் தாம்பத்தியத்தில் அவ்வளவு எளிதாக திருப்தி அடைய மாட்டார்கள். மேற்கொண்டு பலரை நாடுவார்கள்.

சுக்ரன் செவ்வாயுடன் சேர்ந்து சனி பார்த்துவிட்டால் அவர்கள் நீலப்படங்களை அதிகம் பார்ப்பார்கள். சுக்ரனும் சனியும் ஒன்றாக இருந்து செவ்வாய் பார்த்தால் அவர்கள் பிறர் மனையை நாடுவார்கள்.

பிறர் மனையை நாடும் ஜாதகங்களை நாம் பொருத்தம் பார்க்க வரும்போதே இந்த ஜாதகம் வேண்டாம் என்று சொல்லிவிடுவோம். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் வீடு, வசதியைப் பார்த்து பெண்ணைக் கொடுத்துவிட்டு பின்னர் புலம்பும் நிலைதான் உள்ளது.

எனவே பொருத்தம் பார்ப்பதை நல்ல ஜோதிடரை அணுகி பொருத்தம் பாருங்கள். அவர் இந்த ஜாதகம் வேண்டாம் என்று கூறியும், வீடு வசதியைப் பார்த்து திருமணம் செய்து பின்னர் கண்ணீர் சிந்தும் நிலை வேண்டாம்.

Share this Story:

Follow Webdunia tamil