ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
எதையும் நாங்கள் ராசி அடிப்படையில் தான் பார்க்கிறோம். மீன் என்றால் மீன ராசி.
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எல்லாம் வீட்டில் மீன் வளர்க்காமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு இது சரியாக இருக்காது.
மற்றவர்களுக்கு மீனம் என்கிற வீடு யோக வீடாக இருக்கும். எனவே மற்றவர்கள் மீன் வளர்க்கலாம்.
உதாரணமாக ஒருவர் பெசன்ட்நகரில் நிறைய பொருட்செலவில் பெரிய வீடு கட்டினார். 6 மாதம் கழித்து வீட்டில் மீன் தொட்டி வைத்தார்கள். அதில் இருந்து அவர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்தது. என்னிடம் வந்தார். அவர்களுக்கு பிரஷ்ணம் பார்த்ததில், வீட்டில் ஏதாவது லவ் பேர்ட்ஸ், மீன் வளர்க்கின்றீர்களா என்று கேட்டேன்.
ஆமாம், சமீபத்தில் தான் மீன் வளர்க்க ஆரம்பித்தோம். அப்போதில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது என்று அந்த பெண்மணி கூறினார். உடனடியாக அதை அகற்றி விடுங்கள் என்று சொன்னேன். அவர்களும் அதையே செய்தார்கள்.
எல்லாமும் எல்லாருக்கும் பொருந்தாது.
ஒரு பட அதிபர் வந்திருந்தார். தனுசு ராசிக்காரர். அவருக்கு 6வது வீடாக ரிஷபம் இருந்தது. அவர் தனது படத்திற்கு காளை என்று பெயர் வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை.
எதையும் நம்முடைய ராசிக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டும்.
மீன் வளர்ப்பது என்பது எங்கு வளர்த்தாலும் சரியாக வராது. மீன் வளர்க்க ராசியில்லாதவர்கள் மீன் பண்ணை, இறால் பண்ணை வைத்து நஷ்டம் அடைந்தது எல்லாம் கதை உண்டு.
தாவரம் எல்லோரும் வளர்க்கலாம். ஆனால் முள் செடிகள் மட்டும் சிலருக்கு ஒத்து வராது. அதாவது ரோஜா செடி சிலருக்கு ஒத்து வராது. டிசம்பர் பூக்கள், கனகாம்பரம் போன்ற செடிகளை மேஷ ராசிக்காரர்கள் வளர்க்கக் கூடாது.
இது போன்றவற்றை சிலர் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லக் கூடும். ஆனால் ஒவ்வொரு பொருளும் அதற்கான தாக்கம் கொண்ட மனிதர்களை வீட்டிற்குள் கொண்டு வந்துவிடும்.
மேஷ ராசிக்காரர்கள் கனகாம்பரமோ, டிசம்பர் செடியையோ வைத்தால் எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். அந்த செடிகளை..
அகற்றி விட்டுப் பாருங்கள். அவர்களது வருகையும் நின்று விடும்.ஒரு நல்லதோ கெட்டதோ நிகழ்வு நடப்பதற்கு முன்பு, கெட்ட செடிகொடிகள், கெட்ட விலங்குகள் போன்றவை தானாகவே வீட்டிற்குள் வந்துவிடும். அதன் பிறகு கெட்ட மனிதர்களும் வந்துவிடுவார்கள்.எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பர் இருக்கிறார். அவரது மாமாவிற்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே சண்டை போட்டு ஜெயிலுக்கு போவது வரை ஆகிவிடும்.
அவரைப் பற்றிக் கேட்டதற்கு மிதுன ராசி என்றார். அவர் லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறாரா என்று கேட்டேன். ஆமாம் என்றார். அவரது ராசிக்கும், தசா புக்திக்கும் லவ் பேர்ட்ஸ் ஒத்து வராது. முதலில் அவற்றை திறந்துவிடச் சொல்லிவிடு என்று சொன்னேன்.
அவ்வாறே அவரும் செய்தார். அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை. சண்டை போட்டவர்கள் எல்லாம் நட்பாகிவிட்டார்கள்.
நாய் வளர்ப்பது பற்றி?
நாயை பைரவர் என்கிறோம். அது சூரியனின் ஆதிக்கம். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது பலம். வீடும் நன்றாக இருக்கும்.
ஆனால் சூரியன் பகையாக இருக்கும் ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது சரியாக இருக்காது.
அதாவது கடக ராசிக்கு நாய் வளர்ப்பது சரியாக இருக்காது.துலாம் ராசிக்கு சுத்தமா ஒத்து வராது. தொற்று நோய் பரவுதல், நாயால் பிரச்சினை கடித்தல் போன்றவை ஏற்படும்.
மகரம், கும்ப ராசிக்காரர்கள் நிச்சயமாக நாய் வளர்க்கக் கூடாது. மற்றவர்கள் நாய் வளர்ப்பது சரியாக இருக்கும்.
புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் கடக ராசிக்காரர் அயல்நாட்டு நாய் ஒன்றை வாங்கி வந்தார். நான் உங்களுக்கு நாய் வளர்ப்பது சரியாக இருக்காது. ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டேன். அட... பிரான்ஸில் இருந்து வாங்கி வந்தது. கன்னுக்குட்டி மாதிரி இருக்கு என்று சொன்னார். நானும் விட்டுவிட்டேன். 2 மாதத்தில் இறந்துவிட்டது.
எனவே ஒத்து வராதவர்களுக்கு ஒன்று நாய் இறந்துவிடும், நோய் வாய்ப்படும், இவர்களுக்கு நோய் வருவது போன்றவை ஏற்படும்.
செல்லப் பிராணிகள் என்று பார்த்தால் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைப் பிராணிகளாகி விடும்.