சனி, ராகு, கேது மூன்று கிரகங்களும் முந்தைய கர்மாக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் கிரகங்களாகும். அதாவது நாம் முந்தைய பிறவியில் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப இந்த கிரக காலங்கள் அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் இந்த காலங்களில் நாம் சிறப்பாக இருப்போம். நாம் முந்தைய காலத்தில் நல்லவற்றை நிறையச் செய்திருந்தால் இந்த காலத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்து வந்த ஆலையையே வாங்கும் நிலை கூட ஏற்படும்.
ராகு தசையில் சாதாரண அக்கவுண்ட்டன்ட்டாக சேர்ந்து, அந்த நிலையில் முதலாளி இறக்க, அவரது உயிலில் எனக்கு நம்பிக்கையானவர் இவர்தான் என்று அக்கவுண்ட்டன்ட் பெயரை எழுதி வைக்க அவர் முதலாளியானதையும் நான் பார்த்துள்ளேன்.
பூர்வ புண்ணியஸ்தானம் மோசமாக இருந்தால் நாம் அதல பாதாளத்தில் போய் விழுவோம். போன பிறவியில் நாம் யார் யாரையெல்லாம் ஏமாற்றினோமோ அவர்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் நம்மைத் தேடி வந்து ஏமாற்றி விட்டு அல்லது நம்மை அவமானப்படுத்தி, நமக்கு எதிராக வழக்குத் தொடர்வது போன்றவற்றைச் செய்யும் காலம் தான் இவைகள்.
எனவே இந்த காலக்கட்டத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த கிரக அமைப்பு தற்கொலையை தூண்டக் கூடியது. அதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடக் கூடாது. தொடர்ந்து அவமானங்களை தரக்கூடிய கிரகங்கள் இவை. அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்குவார்கள். அதனைத் தாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும்.
இதற்கு பரிகாரங்களும் உண்டு. விபத்தில் சிக்கி காலை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் சிறிய சிராய்ப்புடன் தப்பிக்கும் அளவில் நாம் பரிகாரங்கள் செய்ய இயலும். அது அவரவர் கிரக அமைப்புகளை வைத்துத்தான் பரிகாரங்களை தீர்மானிக்க முடியும்.
பொதுவாக இந்த மூன்று கிரகங்களுக்கும் அதர்வன வேதத்தின் அடிப்படையில்தான் பரிகாரங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்றில்லாமல் மிகத் தெளிவாக ஆழமாக பார்த்து பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
பாவ கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்ய அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளதை வைத்துத்தான் சொல்ல முடியும். அதர்வன வேதத்தில் முழுக்க முழுக்க பரிகாரங்கள் பற்றித்தான் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ரத்த பலி கொடுப்பது அதில் அதிகமாகக் கூறப்பட்டிருக்கும். இப்போதெல்லாம் நாம் நெய் பயன்படுத்துகிறோம். அந்த காலத்தில் எல்லாம் குருதியைத்தான் பயன்படுத்தினார்கள். அதாவது கிரக அமைப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு குருதியைப் பயன்படுத்தினார்கள்.
கிரகங்களின் சேர்க்கை, சஞ்சாரம், நீச்சம் ஆகியவற்றை வைத்து பரிகாரம் சொல்வார்கள். இந்த கிரகம், இந்த சாயலில், இந்த பார்வையில், இந்த இடத்தில் வருகிறது என்பதை வைத்து அதற்கான பரிகாரத்தை கண்டறியவேண்டும். ராகு திசை 7வது இடத்தில் வந்தால் மரணத்தையே கொடுக்கும், அல்லது மரணத்திற்கு ஈடான ஒரு இழப்பைக் கொடுக்கும். அப்போது அதற்கு ஏற்ற வகையில் ஒரு பரிகாரத்தை அளிக்க வேண்டும்.
இந்த தசை நடக்கும் போது சனி இருக்கிறதா, ஏழரை சனி இருக்கிறதா என்பதையும் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் மாறுபடும்.
எல்லாவற்றையும் பார்த்துத்தான் பரிகாரத்தைக் கூற இயலும்.