மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டைக் குறைவான மதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீட்டின் தன்னிச்சையான 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.