பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மல்யுத்த வீராங்களை வினேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதே சமயம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு, மேள தாளங்களுடன் சக வீரர்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர். திறந்தவெளி வாகனத்தில் சொந்த கிராமத்திற்கு வினேஷ் போகத் செல்ல இருக்கிறார்.
ஹரியானாவில் 12 முக்கிய இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாக்ரி தாத்ரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பலாலி கிராமத்திற்கு அவர் செல்ல உள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் வினேஷ் போகத்திற்கு வெளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. வினேஷ் போகத்துடன் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரும் டெல்லி வந்தடைந்தனர்.