எடப்பாடி அணிக்கு தாவும் எம்.எல்.ஏக்கள்? - அதிர்ச்சியில் தினகரன்
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (09:42 IST)
புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் சிலர் எடப்பாடி அணிக்கு தாவும் முடிவில் இருப்பதால் தினகரன் தரப்பு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன் தன்னுடை ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் தலைமையாக செயல்படும் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ நேற்று முன்தினம் தினகரனை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளார். அப்போது, ரிசார்ட்டில் உள்ள சில எம்.எல்.ஏக்களுக்கு சென்னையில் இருந்து தொலைப்பேசி அழைப்பு சென்றதாம். அதில் பேசியவர்கள், ஆட்சி கலைப்பிற்காக நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆட்சி போய்விட்டால் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியாது. நீங்கள் எதற்காக தினகரன் பக்கம் இருக்கிறீர்களோ, அதை உங்களுக்கு நாங்கள் தருகிறோம். இங்கே வந்துவிடுங்கள் என வலை விரித்தார்களாம்.
எனவே, தினகரன் பக்கம் இருக்கும் சில எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி பக்கம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக நேற்றே செய்திகள் வெளியானது.
மேலும், கடிதம் கொடுத்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எதுவும் செய்ய முடியாது என அவர் கை விரித்து விட்டார். தினகரன் எதாவது செய்து, ஆட்சி கவிழ்ந்து தங்களின் எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோய்விட்டால் பிறகு என்ன செய்வது என்கிற பயமும் அங்கு இருக்கும் பலருக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரு பெண் எம்.எல்.ஏ உட்பட 3 எம்.எல்.ஏக்கள் அணி மாறுவது குறித்து யோசித்து வந்துள்ளனர்.
இதுபற்றி தெரிந்து கொண்ட தினகரன், தங்க தமிழ் செல்வன் மூலம் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை ஆட்சியே கவிழ்ந்து திமுக ஆட்சிக்கு வந்தாலும், அவங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கும். அதனால் எம்.எல்.ஏ பதவி போனாலும் பயப்பட வேண்டாம். நான் இருக்கேன்னு சொல்லுங்க என கூறியுள்ளார் தினகரன்.
இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தங்க தமிழ் செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் இறங்கினார்களாம். அந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததாகவும், தற்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்