சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில் தற்போது மருத்துவர்களை இழிவாக பேசியதாக தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கி பேசிய பிரபல யூட்யூபர் மாரிதாஸின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து தனக்கு பதில் மெயில் வந்துள்ளதாக போலியான மெயிலை காட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவதூறு செய்து வெளியிட்ட வீடியோவை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கும் மாரிதாஸ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் சரியாக செயல்படுவதில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அரசு மருத்துவமனைகளை மூடிவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிதி அளிக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பஞ்சு திருடுவதாகவும், மருத்துவமனை பணியாளர்கள் ஏகமான ஊழல்களை மேற்கொள்வதாகவும, மருத்துவ ஊழியர்கள் அரசை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிப்பது போல சம்பளம் உயர்வு பெறுவதாகவும் அவர் பேசியுள்ளார்.
ஆதாரம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், பணியார்களையும் அவர்தம் மருத்துவ சேவைகளையும் இழிவுப்படுத்தி பேசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கம், சுயவிளம்பரத்திற்காக அவதூறு பரப்பும் மாரிதாஸ் மீது அரசும், காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.