சேலத்தில் அண்ணன் முறையுடைவரைத் தன் மகள் திருமணம் செய்துகொண்டதால் அவரின் நான்கு மாதக் குழந்தையை விற்றுள்ளார் பெண்ணின் தாயார்.
சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மீனா மற்றும் ராஜா. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் தங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தம்பதிகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்துக்குப் பின் மீனாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ராஜாவும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை மீனாவின் தாயாரைப் பார்த்துக்கொள்ள சொல்லி ஒப்படைத்துள்ளனர். ஆனால் அவரோ குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். இது சம்மந்தமாக தம்பதிகள் காவல்நிலையத்தில் புகாரளிக்க மீனாவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை முறையினர். அதனால்தான் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அந்த குழந்தையை வைத்துக்கொண்டு நாங்கள் ஊரில் தலைகாட்ட முடியவில்லை. அதனால்தான் விற்று விட்டோம்’ என அதிர்ச்சியளிக்கும் செய்தியினைக் கூறியுள்ளார். இதையடுத்து தம்பதிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் குழந்தையை மீட்டுத் தர சொல்லி மனுக்கொடுத்துள்ளனர்.