ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி பேசிய எஸ்.வி.சேகர் தமிழக அரசியல் கட்சிகளை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அங்கு நடைபெறும் “ஹவுடி மோடி” என்ற விழாவில் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 50000 அமெரிக்க இந்தியர்கள் வருகை புரிந்திருந்தனர். நேற்று நடந்த இந்த விழாவை பற்றி ஹவுடி மோடி ஹேஷ்டேக் பரவலாகி வருகிறது.
தமிழக பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் ஹவுடி மோடி விழாவை சிலாகித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் “நம் இந்தியாவின் பெருமைஉலக அரங்கில் உயர்ந்த உன்னத நேரத்தின் காரணம் நம் உன்னதத்தலைவன் மோடி அவர்கள்.₹200,பிரியாணி.1/4 குடுக்காமல் கூடிய மூளையுள்ளவர் கூட்டம். பணம் கொடுத்து மோடியின் பேச்சை கேட்க வந்தவர்.தமிழகத்தில் மோடியை விமர்சிப்பவர் அவரின் கால் தூசுக்கு ஈடாக மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழக கட்சிகள் பணம், பிரியாணி, மது ஆகியவற்றை வழங்கி கூட்டம் கூட்டுவதாக அவர் மறைமுகமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் பலர் பணம் கொடுத்து மோடியின் பேச்சை கேட்க காத்து கிடப்பதாகவும், அவருடைய பெருமை தெரியாமல் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அவர்களை விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட மோடியையும், அவர் திட்டங்களையும் விமர்சித்தே வந்திருக்கின்றன. இது குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், திட்டியும் பலர் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.