தமிழக பாஜக அடுத்த தலைவர் யார் என்பது குறித்து நாளைக்கு கூட அறிவிக்கப்படலாம் என்று சூசகமாக பேசியுள்ளார் பாஜக பொது செயலாளர்.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றதால் தற்போது பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
தற்போது மத்தியில் பாஜக வலிமையான ஆட்சியை அமைத்துக் கொண்டு விட்டாலும், தமிழகத்தில் இன்னும் சரியான வளர்ச்சியை எட்ட முடியவில்லை. அதனால் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுபவர் கட்சியை வளப்படுத்தும் அளவுக்கு வலு உள்ளவராக இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.
இந்நிலையில் மதுரையில் இன்று நடைபெற இருக்கும் காஷ்மீர் 370 சட்டவிதி நீக்கம் விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார் பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ். அவர் பாஜக தலைவர் யார் என்பது நாளைக்கே கூட அறிவிக்கப்படலாம் என சூசகமாக கூறியுள்ளார்.
இதன்மூலம் நாளை அல்லது மறுநாள் தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் தமிழக சட்டசபை இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்க இருக்கிறது. அதற்குள் பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.