ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த பந்தயமானது 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரின் இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது.
தொடர்ந்து 2-வது சுற்றுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 3-வது சுற்றுப் போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இப்போது பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமா என நிறைய பேர் கேட்கின்றனர் என்றும் ஒரு வீராங்கனையாக பார்த்தால் இது முக்கியம்தான் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் நன்றாக உதவி செய்கிறார் என்பதை மறுக்க முடியாது என்றும் சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயம் வைப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து பிரச்சினைகளையும் கடந்து அவர் இதைச் செய்திருப்பதாகவும், அவருக்கு வாழ்த்துகள் எனவும் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.