ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆக. 31 மற்றும் செப். 1-ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு பந்தயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான மின் விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் உள்பட அனைத்தும் தயாராக உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் FIA அனுமதி அளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.