Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

edapadi

Senthil Velan

, வெள்ளி, 5 ஜூலை 2024 (12:14 IST)
ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   அதிமுகவை திட்டமிட்டு அண்ணாமலை குறை சொல்லி வருவதாக தெரிவித்தார். விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் 3வது, 4வது இடம் பிடிக்கும் என அண்ணாமலை கூறியுள்ளதாகவும், அவர் மெத்த படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி எனவும் அவரது கணிப்பு அப்படி உள்ளது எனவும் விமர்சித்தார்.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடந்தது என்பது பற்றி நாடே அறியும் என தெரிவித்த எடப்பாடி  அது அண்ணாமலைக்கும் தெரியும் என்றார்.   அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று எடப்பாடி விமர்சித்தார்.
 
2014 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றதாகவும், தற்போது, தி.மு.க. வேட்பாளரை விட ஒரு லட்சத்திற்கும் மேல் குறைவான வாக்குகளை அண்ணாமலை பெற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிறகு எப்படி பாஜக வளர்ந்துள்ளது என்று அண்ணாமலை கூறுவதாக எடப்பாடி கேள்வி எழுப்பினார்.

தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே தினமும் அண்ணாமலை பேட்டியளிப்பதாகவும், பாஜக தலைவராக இருந்து தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை மத்திய அரசிடம் பெற்று கொடுத்தார் எனவும் வாயில் வடை சுட்டு கொண்டுள்ளார் எனவும் எப்போது பார்த்தாலும் பொய் பேசுகிறார் எனவும் மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் எனவும் கடுமையாக விமர்சித்தார். 
 
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால், 100 நாளில் நிறைவேற்றுவேன் என முன்னர் கூறிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று எடப்பாடி தெரிவித்தார். இப்படிப்பட்டவர் தலைவராக இருப்பதால் தான் 300க்கு மேல் தொகுதிகளை பெற்ற பாஜக, தற்போது குறைந்த தொகுதிகள் பெற்று கூட்டணி ஆட்சி நடத்தி வருவதாக விமர்சித்தார்.
 
கட்சி விரோத நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டதால் தான் அவர் நீக்கப்பட்டார் என தெரிவித்த எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். 

ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்று நடத்துவார் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும், அந்த நற்பண்பு சசிகலாவிடம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலா செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் எண்ணுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!