தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் சென்ற வாகனத்தை முந்திச்சென்றதாக கோட்டூர்புரத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காலை சென்னை கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருசில இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக ஆளுநர் வாகனத்தை முந்தி சென்றது. அவ்வாறு முந்தி சென்ற ஏழு பேர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்களில் தினேஷ், நவீன் ஆகிய இருவரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் என்பதும், மரிய அந்தோணி, ஹரிபிரசாத் ஆகியோர் தனியார் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் என்பதும் மற்றும் அருண் கணேஷ், லோகேஷ் ஆகியோர் தனியார் நிறுவன ஊழியர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஏழுபேர் மீதும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இருசக்கர வாகனங்களையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.