கச்சா விலை : உயர்ந்ததா? உயர்த்தப்பட்டதா?
, வெள்ளி, 20 ஜூன் 2008 (21:23 IST)
உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி வளர்ச்சியை விட, பெட்ரோலியப் பொருட்களின் உலகளாவிய தேவை அதிகரிப்பு குறைவாக உள்ள நிலையில், தேவைக்கு ஏற்ற அளவிற்கு சந்தையில் கச்சா
நிறைந்திருக்கும் போது எவ்வாறு விலை உயர முடியும்? இது (கச்சா விலையுயர்வு) முற்றிலும் போலியானது, சந்தையின் மீது திணிக்கப்பட்டது என்று ஈரான் அதிபர் அஹமதினேஜாத் கூறியிருக்கிறார்.முன்னெப்போதும் காணா அளவிற்கு கடந்த ஓராண்டுக் காலமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததற்குக் காரணம் உற்பத்தி குறைவினாலோ அல்லது தேவை அதிகரித்ததனாலோ அல்ல என்றும், சர்வதேசச் சந்தையில் உருவாக்கப்பட்ட செயற்கையான சூழலே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் (ஓபெக்) உறுப்பு நாடான ஈரானின் அதிபர் அஹமதுனேஜாத் இப்படி கூறியிருப்பது அதிர்ச்சித்தரக்கூடிய, ஆனால் அப்பட்டமான உண்மையாகும். துபாயில் நடைபெற்ற ஓபெக் அமைப்பின் சர்வதேச மேம்பாட்டு நிதியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஈரான் அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈராக் (அமெரிக்க ஆதரவு அரசின்) எண்ணெய் வள அமைச்சர் ஹூசேன் அல்ஷாரஸ்தானியும் எண்ணெய் விலையேற்றத்திற்கான காரணம் உற்பத்தித் தட்டுப்பாடு அல்ல என்றும்,
அமெரிக்காவில் சப் பிரைம் மார்ட்கேஜ் என்றழைக்கப்படும் நிதிச் சிக்கலால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து வீடு - மனை விற்பனைச் சந்தை முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகத்தில் முதலீடு செய்ததே கச்சா விலையேற்றத்திற்கு உண்மையான காரணம் என்றும் கூறியுள்ளார்.ஈராக், ஈரான், குவெய்த், வெனிசூலா, கொலம்பியா, கட்டார், உள்ளிட்ட 12 ஓபெக் நாடுகளில் அதிகமாக கச்சா உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியாவின் அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இதே காரணத்தைத்தான் கூறினார்.இரண்டு வாரங்களுக்கு முன் கூடிய சவுதி அரேபிய அமைச்சரவையும் இதே கேள்வியை எழுப்பியது. சர்வதேசத் தேவைக்கு ஏற்ற அளவிற்கு கச்சா உற்பத்தி இருக்கும்போது இந்த அளவு விலையேற்றத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியது.அதுமட்டுமின்றி, சவுதி அரேபியாவும் மற்ற ஓபெக் நாடுகளும் கச்சா உற்பத்தியை பெருக்கத் தவறியதே தேவைக்கேற்ற அளவிற்கு உற்பத்தி பெருகாததற்குக் காரணம் என்று குற்றம் சாற்றப்பட்டதற்கு பதிலடி தரும் வகையில், தனது அன்றாட உற்பத்தியை மேலும் 2 லட்சம் பீப்பாய்கள் அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்தது. சவுதியின் இந்த அறிவிப்பினால் அமெரிக்க கச்சா சந்தையில் திடீரென்று மிக அதிகமாக 140 டாலருக்கு உயர்ந்த பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அன்று மாலைக்குள் 134 டாலருக்கு குறைந்தது! விலையேற்றத்திற்கு பற்றாக்குறையல்ல காரணம்!கடந்த மாத இறுதியில் கச்சா விலை வரலாறு காணாத அளவிற்கு 136 டாலர்களுக்கு உயர்ந்தபோது எழுந்த
அதிர்ச்சியை தொடர்ந்து, இந்த விலையேற்றம் நியாயமானதா? இதற்கு காரணமென்ன? சர்வதேச தேவை வளர்ச்சிக்கு ஏற்ற அளவு கச்சா உற்பத்தி உள்ளதா? என்ற கேள்வி அமெரிக்க உட்பட எல்லா நாடுகளிலும் எழுந்தது.
இந்த கேள்விக்கு கிடைத்த பதில்கள் அனைத்தும், கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு பெட்ரோலிய பொருட்களுக்கு உலக அளவில் ஏற்பட்ட பற்றாக்குறையோ அல்லது தேவைக்கு ஏற்ற அளவிற்கு உற்பத்தி உயராததோ காரணமில்லை என்றே கூறின.
இப்படி கூறுவதற்கு ஒரு அடிப்படையும் சுட்டிக்காட்டப்பட்டது. கச்சா விலை என்றைக்கு பீப்பாய் ஒன்றிற்கு 136 டாலர்களை எட்டியதோ அந்த நாளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்ததாக எந்த
நாட்டிலிருந்தும் செய்தியுமில்லை, தகவல்களும் இல்லை. தேவைக்கேற்ற அளவிற்கு உற்பத்தி இல்லையென்றால் பற்றாக்குறை ஏற்படும். அப்படி பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அது சில்லரை விற்பனை சந்தையில் (பெட்ரோல் நிலையங்களில்) எதிரொலித்திருக்க வேண்டுமே? ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதைவிட அதிர்ச்சியான மற்றொரு தகவல் ஆங்கில வணிக நாளிதழ் ஒன்றில் வெளியானது. அந்தத் தகவலை அளித்த கட்டுரையாளர், கச்சா விலை 136 டாலர்களை எட்டிய அன்று, உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்கள் நிரப்பப்பட்ட 25திற்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் (டாங்கர்கள்) விற்பனை உத்தரவை எதிர்பார்த்து செங்கடலில் காத்திருந்தன என்று கூறியிருந்தார். சர்வதேச அளவில் கச்சா பற்றாக்குறை இருப்பது உண்மையெனில் இது எப்படி சாத்தியம் என்று அந்த கட்டுரையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.இப்படிப்பட்ட கேள்விகள் உலகெங்கிலும் எழுப்பப்பட்டது. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை. எனவே தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான வித்தியாசத்தால் ஏற்படும் பற்றாக்குறை அல்ல விலையேற்றத்திற்கான காரணம் என்பது தெளிவாகிறது. அப்படியானால் விலையேற்றத்திற்கு என்ன காரணம்? எவ்வாறு விலைகள் உயர்ந்தன அல்லது உயர்த்தப்பட்டன என்பது தொடர்பான விவரங்களும், செய்திகளும் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கின்றன.விலையை உயர்த்திய ஊக வணிகர்கள்!அப்படி கிடைத்த விவரங்களில் சிலவற்றைத்தான் நாம் ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் உள்ளது. அந்த விவரங்களில் மிக மிக முக்கியமானது இதுதான்:அமெரிக்க எண்ணெய் சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகத்தில் ஊக வணிகர்களின் பங்கு 70 விழுக்காடு அளவிற்கு உள்ளது. பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் என்றழைக்கப்படும் முன்பேர ஒப்பந்தங்களை இந்த ஊக வணிகர்கள் மிக அதிக அளவில் வாங்குகின்றனர். இவர்களுடன் வர்த்தகம் சாரா வணிகர்களையும்
சேர்த்தால் அமெரிக்க எண்ணெய் சந்தையில் இவர்களின் பங்கு சற்றேறக்குறைய 70 விழுக்காடு உள்ளது என்று கூறியுள்ள வணிக பொருட்கள் முன்பேர ஒப்பந்த ஆணையம் (commodities futures trading commission - CFTC), கடந்த 2005 ஏப்ரல் மாதத்தில் 57.4 விழுக்காடாக இருந்த இவர்களின் பங்கு இந்த ஆண்டு ஏப்ரலில் 67.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு இந்த ஊக வணிகர்கள் காரணமா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் கேள்வி கேட்டு எழுதிய கடித்தத்திற்கு பதிலளித்து இத்தகவல்களை அளித்துள்ள சி.எஃப்.டி.சி., ஊக வணிகர்களாலோ அல்லது எண்ணெய் விலை ஏறுமா? ஏறாதா? எந்த அளவிற்கு ஏறும்? என்று ஒவ்வொரு நாளும் பந்தயம் கட்டும் சூதாடிகளால் எண்ணெய் விலைகள் உயர்கின்றது என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மழுப்பலாக கூறியுள்ளது.முன்பேர வர்த்தகம் (Futures Trading) என்றால்...இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், கச்சா விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியேட்டின் (WTI) முன்பேர ஒப்பந்தங்களை வாங்குவதில் ஊக வணிகர்களும், விலை சூதாடிகளும் 2005ஆம் ஆண்டு முதல் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதே. ஏனென்றால் இவர்களின் பங்கேற்பு அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்பது தெரிகிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் சந்தைகளிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது.
அமெரிக்க காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு சி.எஃப்.டி.சி. அளித்த பதில் உண்மைகளை மறைப்பதாக உள்ளதென்றும், சர்வதேச அளவில் கச்சா விலையை நிர்ணயிக்கும் அமெரிக்க எண்ணெய் சந்தையின் நடவடிக்கைகள் மேலும் வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் (செனட்) எரிசக்தி வணிகக் குழுவின் தலைவர் ஜெஃப் பிங்காமான் கூறியுள்ளார்.
எரிசக்தி பெறுதலை (சப்ளை) உறுதிசெய்துகொள்ள இப்படி முன்பேர ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுண்டு. ஆனால் இதில் ஊக வணிகர்களுக்கு இடமளிக்கப்பட்டால் என்ன ஆகும்? கச்சா உற்பத்தி நிறுவனங்களிடம்
முன்பேர ஒப்பந்தம் செய்துகொண்டு, கச்சா வணிகத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். இவர்களிடமுள்ள முன்பேர ஒப்பந்தத்தைப் பெற்றுதான் கச்சா சப்ளை பெற முடியும். அப்பொழுது இவர்கள் வைத்த விலையைத்தான் கச்சா வாங்கும் நிறுவனங்களோ அல்லது நாடுகளோ அளிக்க வேண்டும். எனவே தட்டுப்பாடு அல்ல, மாறாக உற்பத்தியாகும் கச்சாவை முன்பேர ஒப்பந்தம் பெற்றுக் கட்டுப்படுத்தும் இந்த ஊக வணிகர்களே விலையை ஏற்றுகிறார்கள்.அமெரிக்காவில் சப் பிரைம் மார்ட்கேஜ் என்ழைக்கப்பட்ட வங்கிக் கடன் நெருக்கடியால் நிதிச் சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை அடுத்து, இந்த ஊக வணிகர்கள் மிக அதிக அளவில் கச்சா முன்பேர ஒப்பந்தங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கத் துவங்கியதிலிருந்துதான் கச்சா விலை தாறுமாறாக உயர ஆரம்பித்தது. அதன் உச்ச கட்டமே பீப்பாய் கச்சா விலை 136 டாலர்களுக்கு அதிகரித்தது என்பது தெளிவாகியுள்ளது. மற்றொரு காரணம், சில முதலீட்டு வங்கிகளும் இதன் பின்னனியில் இருந்து இந்த வர்த்தகத்தை ஊக்குவித்துதான் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் கிளப்பிவிட்ட கதைதான்: “கச்சா உற்பத்தி அதன் அதிகபட்ச அளவை எட்டிவிட்டது, எனவே கச்சா விலை தொடர்ந்து அதிகரித்து பீப்பாய்க்கு 200 டாலராக உயரும்” என்பது.அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சந்தையான நியூ யார்க் மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்சில் கச்சா
எண்ணெய் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலையும் மும்மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இது உற்பத்தி - தேவை (Demand - Supply) இடைவெளியால் ஏற்படும் பற்றாக்குறையால் கச்சா விலை உயரவில்லை, மாறாக ஊக வணிகர்களால் உயர்த்தப்பட்டது உறுதியாகியுள்ளது. இதில் எண்ணெய் உற்பத்தி நாடுகள் (அந்நாடுகளின் கச்சா உற்பத்தி நிறுவனங்கள்) கொள்ளை லாபம் ஈட்டின. அதற்கு காட்டப்பட்ட காரணம்: பற்றாக்குறை! உண்மையில் பற்றாக்குறை என்று ஏதும் இல்லை என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் உள்ளது.செயற்கையான சந்தை நடவடிக்கைகளால் கச்சா விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறிய சவுதி அரேபியா தனது உற்பத்தியை நாளொன்றுக்கு மேலும் 2 லட்சம் பீப்பாய்கள் அதிகப்படுத்துவதாகக் கூறியது. இது குறித்து (500 மில்லியன் டாலர் அளவிற்கு) முன் விற்பனை ஒப்பந்த வணிகத்தில் ஈடுபட்டுவரும் குளோபல் கம்மாடிட்டிஸ் ஃபண்ட எனும் ஆஸ்ட்ரேலிய நிறுவனத்தின் தலைவர் கிரெக் ஸ்மித், “அவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியும், குழாயைத் திறந்துவிட முடியும், ஆனால் அவர்களின் உற்பத்தியை வாங்குவதற்கு வணிகர்கள் கிட்டுவார்களா?” என்று கூறியுள்ளார். இது நமது நாட்டில் வெளிவரும் ஒரு ஆங்கில வணிக நாளிதழில் வெளிவந்துள்ளது.எப்படி இருக்கிறது கதை? இப்பொழுது தெரிகிறதா விலை உயருகிறதா அல்லது உயர்த்தப்படுகிறதா என்பது.
கச்சா விலையேற்றத்திற்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் காரணம் என்று கூறிவந்த இந்த சந்தை சக்திகள், சவுதி அரேபியா உற்பத்தியை பெருக்கும் என்று கூறியவுடன், அதை யார் வாங்குவார்கள் பார்க்கலாம் என்று கூறுகிறது என்றால்... உண்மை நிலவரம் என்ன? பற்றாக்குறை இல்லை என்பதுதானே? பற்றாக்குறை இருந்தால் உற்பத்தியை வாங்க வணிகர்கள் வர மாட்டார்களா என்ன? ஆக, அமெரிக்காவிலிருந்து ஆஸ்ட்ரேலியா வரை சங்கிலித் தொடராக இயங்கும் இந்த முன்பேர வர்த்தக சக்திகள் நடத்தும் திருவிளையாடலே கச்சா எண்ணெய் விலையேற்றம்.
இதில் எண்ணெய் நிறுவனங்களும், எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துள்ளன.
இதுதான் உலகளாவிய பொருளாதாரம்!