கந்து வட்டிக் கடன்களை ரத்து செய்யாமல் தற்கொலைகளைத் தடுக்க முடியாது!
, சனி, 1 மார்ச் 2008 (19:18 IST)
நமது நாட்டின் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, கூட்டுறவு வங்கிகளிலிருந்து அரசு வங்கிகள் வரை சிறு, நடுத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருப்பது மன மகிழ்ந்து வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது தொடரும் தற்கொலைகளைத் தடுக்குமா என்பதுதான் இன்னமும் பதில் காண முடியாத கேள்வியாகவுள்ளது. இரண்டு ஹெக்டேர் (5 ஏக்கர்) வரை நிலம் வைத்துள்ள சிறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.50,000 கோடியும், இதர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இந்தக் கடன் தள்ளுபடி தங்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை என்று, விவசாயிகள் அதிகமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும்பான்மையோருக்கு 5 ஏக்கருக்கும் அதிகமாகத்தான் நிலம் உள்ளது என்றும், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரையறையால் தங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குள்ள நிலங்களின் அளவை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் கடன் சுமையிலிருந்து விடுபட இயலாத காரணியை அடிப்படையாகக் கொண்டு - உதாரணத்திற்கு, விதர்பா பகுதியில் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பருத்தி பயிர் செய்து கடன் பட்டவர்கள் - கடன் நிவாரணம் அளிப்பது சரியாக இருக்கும்.
இரண்டாவதாக, மராட்டியத்திலிருந்து ஆந்திரம் வரை கடன் சுமையிலிருந்து விடுபட வழியில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளில் பெரும்பான்மையோர் கந்து வட்டிக் கடன் பட்டவர்களாவர். மாதத்திற்கு 3, 5, 7 விழுக்காடு என்று சிறிய தொகையைப் பெற்று கடன் பட்டு, அதைக்கூட திருப்பிக் கட்ட முடியாமல் தூக்கில் தொங்கியவர்களே அதிகம்.விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்த கணக்கை தேச குற்றப் பதிப்பு வாரியம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் (சிறப்பு தூக்கு மண்டலம்) தமிழ்.வெப்துனியா.காம் குறிப்பிட்டிருந்தபடி, வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத் துறை வங்கிகளிலும் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமின்றி, கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி ரத்து செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தோம்.ஏனெனில் கந்து வட்டிக்குப் பெற்ற கடன்களை ரத்து செய்யாமல், தங்களை மரண வேதனையில் அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமையிலிருந்து விவசாயிகளை மீட்க முடியாது.எனவே, மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், சட்டிஷ்கர், மத்திய பிரதேசம் மாநில அரசுகள் அனைத்தும் கந்து வட்டி அனைத்தையும் ரத்து செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்.இதைச் செய்யவில்லையெனில், தற்கொலைகள் தொடர்கதையாவதை முழுமையாகத் தடுக்க இயலாது.