ஆப்பிள் தனது மொபைல் ஃபோன்களில் வழங்கி வரும் கேமரா சேவையை மேம்படுத்த ஒரு புதிய நிறுவனத்தையே விலைக்கு வாங்கியுள்ளது.
உலகளாவிய செல்போன் விற்பனையில் ஆப்பிள் ஐஃபோனை பின்னுக்கு தள்ளும் விதமாக மேலும் புதிய புதிய நிறுவனங்கள் தரமான மொபைல்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. ஆப்பிள் ஐஃபோன் போல பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் மட்டுமே வாங்கும் அளவுக்கான விலையில் இல்லாமல் சாதாரண மக்களும் வாங்கும் அளவில் மற்ற நிறுவன மொபைல்கள் இருப்பதால் மக்கள் அவற்றை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் மக்கள் ஒரு ஃபோனை வாங்க முக்கியமான காரணமாக இருப்பது அந்த ஃபோனில் உள்ள கேமராவின் தரம். இதனாலேயே சியோமி, ஓப்போ, விவோ போன்ற பிரபல மொபைல் நிறுவனங்கள் அட்டகாசமான தரத்துடன் கேமரா வசதிகள் கொண்ட ஃபோன்களை அறிமுகம் செய்து வருகின்றன. மிகவும் அரிதாகவே புதிய மாடல்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் இதனால் சாமனிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டே உள்ளது.
இந்நிலையில் மற்ற எந்த நிறுவன ஃபோன்களிலும் இல்லாத அளவுக்கு உயர்தரமான கேமரா வசதியை தங்களது ஃபோனில் அளிக்க ஒரு நிறுவனத்தையே விலைக்கு வாங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். லண்டனை தலைமையகமாக கொண்டு புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்பெக்ட்ரல் எட்ஜ்” என்ற நிறுவனம் கேமராக்கள் குறித்த பெரும் ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதன்மூலம் அடர்ந்த இருட்டிலும் கூட அகசிவப்பு கதிர்களை பயன்படுத்தி ஃபோகஸ் செய்வது, தெளிவான , பிரகாசமான போட்டோக்களை எடுப்பது குறித்து அந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
தற்போது அந்த நிறுவனத்தை ஆப்பிள் வாங்கிவிட்டதன் மூலம் தனது ஐஃபோன்களில் மூன்று கேமராக்களை உபயோகித்தே வைட், ஸூம், பொர்ட்ரெய்ட் ஆகிய அனைத்து வகைகளிலும் போட்டோ எடுக்க முடியும் என்பதோடு, இரவில் எடுக்கப்படும் போட்டோக்கள் மற்ற ஃபோன்களின் எடுக்கப்படுவதை விட பலமடங்கு தரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் 4K ரெசல்யூஷனில் 60FPS முதல் 120FPS வரையிலான துல்லியமான ஸ்லோ மோஷன் வீடியோக்களையும் எடுக்க முடியும் என கூறப்படுகிறது.