இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக ஆடி நிறுவன கார்கள் விலை லட்சங்களில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி பயன்பாட்டில் உள்ள நிலையில் முன்னதாக 28 சதவீதம் வரை நான்கு அடுக்கு ஜிஎஸ்டி முறை பின்பற்றி வந்த நிலையில் தற்போது அவை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டு பல பொருட்களுக்கான வரிவிகிதம் குறைந்துள்ளது.
முக்கியமாக மக்கள் அதிகம் வாங்கும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வரிகளும் வெகுவாக குறைந்துள்ளதால் விற்பனை விலையும் குறைந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செப்டம்பர் 22ம் தேதி அமலுக்கு வரும் நிலையில் இந்த வரிக்குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மானிய கார் நிறுவனமான ஆடி, தனது கார் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2.60 லட்சம் தொடங்கி ரூ.7.80 லட்சம் வரை கார்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் கார் விற்பனை அதிகரிக்கும் என ஆடி நிறுவனம் எதிர்பார்ப்பில் உள்ளது.
ஆடி மட்டுமல்லாமல் டொயோட்டா, மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட பல கார் நிறுவனங்களும், மோட்டார் சைக்கிள் நிறுவனங்களும் தீபாவளியை மையப்படுத்தி தங்களது வரிக்குறைப்பு செய்யப்பட்ட விலைச்சலுகையில் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகின்றன.
Edit by Prasanth.K