ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அ.தி.மு.க. சார்பில் முழு மனதுடன் வரவேற்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை வழிநடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. கட்டமைப்பை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி.யை இரண்டு அடுக்குகளாக மாற்றியமைத்த முடிவு, அத்தியாவசிய பொருட்கள், சுகாதாரம், விவசாய உள்ளீடுகள் மற்றும் காப்பீட்டுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை போன்றவை எளிமை, நியாயம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், வரி இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.