நடிகர் ரகுவரன் காலமானார்!
, புதன், 19 மார்ச் 2008 (18:32 IST)
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ரகுவரன் இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. தமிழ்த்திரையுலகில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ரகுவரன்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் ரகுவரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது உடல்நலம் தேறிய ரகுவரன் வீடு திரும்பினார்.இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுவரன் இன்று காலை 6.15 மணிக்கு உயிரிழந்தார்.ரகுவரன் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். நடிகை ரேவதி மருத்துவமனைக்கு நேரில் சென்று ரகுவரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.ரகுவரனின் உடல் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவருக்கு உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தி.நரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.'
ஏழாவது மனிதன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரகுவரன். இவர் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். ரஜினியுடன் மனிதன், ஊர்காவலன், பாட்ஷா, முத்து, அருணாச்சலம் உள்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த சிவாஜி படத்தில் கூட ரஜினியுடன் குணச்சித்திர பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார்.நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ஒரு மகன் உள்ளார். நடிகர் ரகுவரனின் திரையுலக வாழ்க்கை!