1983ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய ஒரு ஓடை நதியாகிறது என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரகுவரன்.
ஆனால் 1984ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் திரைப்படம் சிறப்பாக ஓடியதால் மக்களிடம் பிரபலமானார்.
ரகுவரனின் பூர்வீகம் கேரளா. இவர் பிறந்தது கோவையில். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார்.
ஒரு ஓடை நதியாகிறது படத்தில் அறிமுகமானதற்குப் பிறகு இவர் நடித்த பல படங்கள் மிகவும் பேசப்பட்டன. கூட்டுப் புழுக்கள், என் வழி தனி வழி, புரியாத புதிர், டைகர் ராஜ், மனிதன், பாட்ஷா, மக்கள் என் பக்கம் ஆகிய படங்களில் ரகுவரன் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றார்.
சமீபத்தில் நீண்ட காலம் நடிப்பதைத் தவிர்த்து வந்த ரகுவரனை, தான் இயக்கிய சிலப்பதிகாரம் படத்தில் நடிக்க வைத்தார் கரு. பழனியப்பன்.
அதன்பிறகு பல படங்களில் நடித்தார். தொடக்கம் படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேடத்தில் ரகுவரன் நடித்தார். அந்த வேடத்தில் நடித்தது தனக்கு நிறைவாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.
இசை, கவிதையில் ஆர்வமுடையவர் ரகுவரன். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில இசைத் தொகுப்பைத் தயாரித்து வைத்திருந்ததாகவும், அதனை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் சில நேரங்களில். நடித்துக் கொண்டிருந்த படம் இந்திர விழா, யாரடி நீ மோகினி. இது தவிர அஜித்தின் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் ரகுவரன் நடித்துள்ளார்.
இந்த நிலையில்தான் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரகுவரன் இன்று காலை மரணமடைந்தார்.
அவருடைய உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜகதாம்பாள் தெருவில் இருக்கும் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன்,இயக்குநர் ராமநாராயணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்