நேற்று நடந்த ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் லக்னோ அணி தோற்றாலும் அதன் கேப்டன் கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார்.
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் இடையே அரையிறுதிக்கான மோதல் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ராஜட் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் பார்ட்னர்ஷிப் அபாரமாக வொர்க் அவுட் ஆனது. படிதார் 54 பந்துகளில் 112 ரன்களை குவித்து எதிர்தரப்பை கலங்க செய்தார்.
பின்னதாக களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.
ஆனாலும் இந்த போட்டியில் கே.எல்.ராகுல் வேறு ஒரு சாதனையை படைத்துள்ளார். முன்னதாக பஞ்சாப் அணிக்கு விளையாடிய போதிலும் கே.எல்.ராகுல் 2018,2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஒவ்வொரு சீசனிலும் 600க்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்தார். தற்போதைய சீசனிலும் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 600 ரன்களை கடந்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600க்கும் அதிமான ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பெங்களூர் அணி முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 சீசன்களில் 600 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.