நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் நேற்றைய ப்ளே ஆப் போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அணி கேட்பன் கே.எல்.ராகுல் விளக்கமளித்துள்ளார்.
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் இடையே அரையிறுதிக்கான மோதல் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ராஜட் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் பார்ட்னர்ஷிப் அபாரமாக வொர்க் அவுட் ஆனது. படிதார் 54 பந்துகளில் 112 ரன்களை குவித்து எதிர்தரப்பை கலங்க செய்தார்.
பின்னதாக களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல் “எங்கள் அணி தோல்வியடைந்ததற்கு மோசமான பீல்டிங்தான் காரணம். முக்கியமான கேட்ச்சுகளை தவறவிட்டது தோல்விக்கான முக்கிய காரணியாக உள்ளது. நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம், ஒவ்வொரு அணியும் அதைச் செய்கிறது. இது ஒரு இளம் அணி. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.