Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைதான கப்பலில் பாஜக பிரமுகர் இருந்தது ஏன்?'

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (13:48 IST)
இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதில் பாரதிய ஜனதா கட்சியால் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ (என்.சி.பி) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான நவாப் மலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

"மும்பை கடற்கரையோரம் சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள், நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அலுவலத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் காணொளியில், ஆர்யன் கானுடன் அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்பவரின் பெயர் கே.பி. கோஸ்வாமி. அவர் ஒரு தனியார் டிடெக்டிவ். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மணீஷ் பானுஷாலியும் அந்தக் காணொளியில் உள்ளார்," என்று நவாப் மலிக் கூறியுள்ளார்.

ஆர்யன் கான் கைதானபின் கே.பி. கோஸ்வாமி ஆர்யனுடன் எடுத்த செல்ஃபி சமூக ஊடகங்களில் வைரலானதும், அவர் தங்கள் ஊழியர் அல்ல என்று என்.சி.பி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"மணீஷ் பானுஷாலியின் பேஸ்ஃபுக் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா, குஜராத் அமைச்சர்கள், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோருடன் எடுத்த படங்கள் உள்ளன. டெல்லியிலும், குஜராத்திலும் யாரைச் சந்தித்தார்? என்.சி.பி கப்பலில் சோதனை செய்தபோது அவர் அங்கு என்ன செய்தார்?" என்றும் மலிக் கேள்வி எழுப்பினார்.

"செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மணீஷ் பானுஷாலி குஜராத் அமைச்சர்கள் சிலரை சந்தித்துள்ளார். 21ஆம் தேதி அதானி நிறுவனம் இயக்கும் முந்த்ரா துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 28ஆம் தேதி மீண்டும் குஜராத் சென்ற பானுஷாலி குஜராத்தில் ராணா என்ற அமைச்சரைச் சந்தித்துள்ளார். பின்பு அக்டோபர் 3ஆம் தேதி மும்பை கப்பல் கைது நடவடிக்கையில் எப்படி அவரே கலந்துகொண்டார், " என்றும் மலிக் கேள்வி எழுப்புகிறார்.

ஆர்யன் கானுடன் கைதான அர்பாஸ் மெர்சன்ட் என்பவரை மணீஷ் பானுஷாலி நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்வதையும் ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியில் பார்க்க முடிகிறது.

சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை; கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்று என்.சி.பி வெளியிட்டுள்ள காணொளி, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டது என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நவாப் மலிக் தெரிவித்தார்.

நவாப் மலிக் செய்தியாளர்களைச் சந்தித்த பின் மணீஷ் பானுஷாலி, கே.பி. கோஸ்வாமி ஆகிய இருவரும் இந்த வழக்கின் சாட்சிகள் என்று என்.சி.பி கூறியுள்ளது.

கைது நடவடிக்கை சட்டப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பக்கச்சார்பின்றியும் நடந்தது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மணீஷ் பானுஷாலி என்ன சொல்கிறார்?

நவாப் மலிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க பிபிசி தொடர்புகொண்டபோது மணீஷ் பானுஷாலி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

"நான் ஊடகங்களில் ஏற்கனேவே தெரிவித்துவிட்டேன்; அதிகாரிகளுக்கு சில தகவல்களை வழங்கியுள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது கப்பலில் இருந்ததை மணீஷ் பானுஷாலி ஒப்புக்கொண்டுள்ளார்.

"நவாப் மலிக் எனக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தக் கைது நடவடிக்கைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அக்டோபர் 1ஆம் தேதி போதைப்பொருள் பயன்படுத்தும் பார்ட்டி சொகுசுக் கப்பலில் நடப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. மேலதிக தகவல்களை வழங்க நான் என்.சி.பி அதிகாரிகளுடன் நான் அந்தக் கப்பலில் இருந்தேன், " என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிகிறது.

பாஜக கூறுவது என்ன?

நவாப் மலிக்கின் மருமகன் (மத்திய விசாரணை முகமை ஒன்றால்) வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், பாஜகவுக்கு எதிராக அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிர சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவரும் மாநில பாஜகவின் மூத்த தலைவருமான பிரவீன் தரேக்கர்.

மணீஷ் பானுஷாலி என்பவரைச் சந்தித்த நினைவில்லை என்றும் தரேக்கர் கூறியுள்ளார்.

பொது நிகழ்வுகளில் பலரையும் சந்திப்போம்; அப்போது அவர்கள் படம் எடுத்துக் கொள்வார்கள். அனைவரையும் குறித்து விசாரிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

என்ன நடந்தது?

'கார்டெலியா` என்ற கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி ஒன்று நடைபெறுவதாக என்.சி.பி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த கப்பல் மும்பையிலிருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்தது. கப்பலுக்குள் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை போல சென்றனர். கப்பல் பயணம் தொடங்கியவுடன் பார்ட்டி தொடங்கியுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி காலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வாங்கடே, ஊடகங்களிடம் இதுகுறித்த தகவலை வெளியிட்டார்.இந்த பார்ட்டிக்கான கட்டணம் தலைக்கு 80 ஆயிரம் ரூபாய் என தெரியவந்திருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் பற்றி கூறிய மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அதுல் லோந்தே, குஜராத்தில் பிடிக்கப்பட்ட போதைப் பொருள்களுக்கு என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments