Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இந்து - முஸ்லிம் சர்ச்சையால் உள்ளூர் மக்கள் கவலை

BBC
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:57 IST)
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் கடந்த வார இறுதியில் நடந்த பெரிய அளவிலான போராட்டத்ததைத் தொடர்ந்து, அதே மாதிரியான போராட்டம் பர்மிங்காமின் ஸ்மெத்விக் நகரில் அமைந்துள்ள துர்கா பவன் கோவில் மற்றும் சமூக மையத்திற்கு வெளியே நடந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவரான சாத்வி ரிதம்பரா இந்தக் கோவிலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருந்தார். அவர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்குள்ளவர் என்று கூறி 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கோவிலின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1990களில் கவனம் பெற்ற சாத்வி ரிதம்பரா, பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பு கொண்டவர்.

57 வயதான அவர், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னுடைய தொண்டு நிறுவனமான 'பரம் சக்தி பீடம் யூ.கே.' ஏற்பாடு செய்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 20 முதல் 24ஆம் தேதிவரை பர்மிங்காம், போல்டன், கோவென்ட்ரி, நாட்டிங்ஹாம் மற்றும் லண்டனில் உள்ள இந்து கோவில்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று கூறிய பிறகும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். சாத்வி ரிதம்பராவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல ஆன்லைன் காணொளிகளில், போராட்டக்காரர்கள் சுற்றியுள்ள தடுப்பு வேலியில் ஏறும்போது, காவல்துறையினர் தலைக்கவசங்கள் மற்றும் கேடயங்களுடன் அவர்களை எதிர்கொள்வதையும், கோவிலில் இருந்து அவர்களை நகர்த்த முயற்சிப்பதையும் காண முடிகிறது. கத்தி வைத்திருந்ததாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சுரேஷ் ராஜ்புரா பிபிசியிடம் பேசும்போது, "நான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவிலுக்குச் செல்வேன். சம்பவத்தன்று சென்றபோது 200 முதல் 250 பேர் கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கத்திக் கூச்சலிட்டனர். கோவிலுக்கு வெளியே நிறைய காவலர்களையும் பார்த்தேன். சாலையின் இருபுறமும் இருந்த அவர்கள் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தனர்" என்றார்.

"இந்தப் போராட்டக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவது கடினம், ஆனால் அவர்கள் அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்டனர்" என்கிறார் சுரேஷ் ராஜ்புரா.

"சில போராட்டக்காரர்கள் பாட்டில்களை வீசியதை, கோவில் அதிகாரிகளையும், காவலர்களையும் மிரட்டியதை, வசைபாடியதை நான் பார்த்தேன். அவர்களில் சிலர் காவலர்களை நோக்கியும் கோவிலை நோக்கியும் பட்டாசுகளை வீசினர். அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை" எனக் கூறும் சுரேஷ் ராஜ்புரா, முதன்முறையாக நடக்கும் இத்தகைய சம்பவங்களைக் கண்டு உள்ளூர் மக்கள் கவலை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

அமைதிக்கு அழைப்பு விடுத்த இமாம்

செவ்வாய் மாலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, ஸ்மெத்விக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஆபிரகாமிக் அறக்கட்டளையின் தலைமை இமாம் மௌலானா நசீர் அக்தர் அமைதிக்கு அழைப்பு விடுத்து ஓர் ஆன்லைன் காணொளியை வெளியிட்டிருந்தார். மதத் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலை அடுத்து, நிகழ்வு ரத்து செய்யப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அந்தக் காணொளியில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

சாத்வி ரிதம்பராவின் சர்சைக்குரிய பின்னணியை அறிந்த பிறகு கோவில் நிர்வாகம் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ளும்படியும் வலியுறுத்தினார்.
webdunia

ஆனால், தலைமை இமாம் மௌலானா நசீர் அக்தர் மற்றும் காவல்துறையினரின் வேண்டுகோளையும் மீறி போராட்டக்காரர்கள் கோவிலின் வெளியே பெரிய அளவில் திரண்டனர்.

முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஸ்மெத்விக் மற்றும் சாண்ட்வெல்லில் செயல்பட்டுவரும் 'விசுவாச நண்பர்கள்' குழு, துர்கா பவன் கோவில் நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"கோயிலுக்கு வெளியே போராட்டம் - வருத்தம் தருகிறது"

அந்த அறிக்கையில், "திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலின் வெளியே போராடுவதற்கு போராட்டக்காரர்கள் தேர்ந்தெடுத்த வழி எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. பேச்சாளரை ரத்து செய்தது தொடர்பான அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. கோவில் தலைவர்களையும் காவல்துறையினரையும் உள்ளூர் மதத் தலைவர்கள் சந்தித்து, அந்தப் பேச்சாளர் குறித்த எங்களது கவலைகளையும் திட்டமிடப்பட்ட போராட்டம் குறித்தும் விவாதித்தோம்.

கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இதுவே சிறந்த வழி என்பதை அறிந்து, இறைநம்பிக்கைச் சமூகங்களுக்கிடையில் உரையாடலை ஊக்குவிக்கிறோம். மேலும் சாண்ட்வெல்லில் இதற்காக தொடர்ந்து பணியாற்றுவோம். தங்களுக்கு உடன்படாத விஷயங்களுக்குப் பதிலளிப்பதற்கு வன்முறையே வழி என்று ஒரு சிலர் நினைத்துள்ளனர். நேற்று இரவு அமைதி காக்க முயன்ற அனைவருக்கும் நன்றி. சாண்ட்வெல்லில் பல ஆண்டுகளாக நிலவிவரும் சிறந்த, இணக்கமான உறவுகளை மீட்டெடுப்பதையும், தொடர்வதையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மெத்விக் பகுதியில் நிலவும் அமைதியின்மைக்கு அந்தப் பகுதியின் உள்ளூர் கவுன்சிலர் அஹ்மத் போஸ்தானும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், "இன்றிரவு ஸ்மெத்விக்கில் காணப்பட்ட இழிவான காட்சிகள் எங்கள் ஊரின் இணக்கமான செழுமையான பன்முகத்தன்மையைக் குறிக்கவில்லை. தவறான நோக்கத்துடன் வந்தவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள். இத்தகைய மதவெறிக்கு எதிராக நமது சமூகங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றன. வெறுப்பைக் கடைப்பிடிப்பவர்கள் இங்கு வரவேற்கப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிபிசியிடம் பேசிய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அதிகாரி ஒருவர், இந்து கலாச்சார வள மையத்தில் நடக்க இருந்த நிகழ்வுக்கு எதிரான திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றி அறிந்திருந்ததாகவும், உள்ளூர் மற்றும் பிராந்தியம் முழுவதும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பந்த்: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம்