Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லெஸ்டர் இந்து - முஸ்லிம் மோதல்: முடிவுக்குக் கொண்டு வர இரு சமூகத்தினரும் கூட்டறிக்கை

BBC
, புதன், 21 செப்டம்பர் 2022 (13:38 IST)
பிரிட்டனின் லெஸ்டர் நகரில் நடந்த இந்து - முஸ்லிம் மோதல் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப்படுகின்றனர். கடந்த வார இறுதியில் லெஸ்டரில் நடந்த போராட்டத்தில் கையில் கத்தி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒருவர், சமூக ஊடக பதிவுகளால் தான் ஈர்க்கப்பட்டு அப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அடையாள அணிவகுப்பில் கத்தி வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 21 வயதான ஆடம் யூசுஃப், இடைநிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையைப் பெற்றார்.

சனிக்கிழமையன்று ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 25 அதிகாரிகள் காயமடைந்தனர். ஒரு போலீஸ் நாயும் காயமுற்றது . இந்து, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்களால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது.

'போலிச் செய்தி'

லெஸ்டர் காவல்துறையின் தற்காலிக தலைமை கான்ஸ்டபிள் ராப் நிக்சன், சமூக ஊடகங்கள் இந்தப் பதற்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதில் "பெரும் பங்கு" வகித்ததாக பிபிசியிடம் கூறினார்.

மக்கள் மீதான தாக்குதல்கள், மத ஸ்தாபனங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தகவல்களைச் சான்றுகளாகக் காட்டி, "இங்கே பொய்யான தகவல்கள் பரவுகின்றன" என்று கூறினார்.

"சமூக ஊடகங்களில் அத்தகைய தகவல்களைப் பார்க்கும் மக்களால் அதைச் சரிபார்த்து உண்மையானதா என்பதை உறுதிசெய்ய முடியாவிட்டால், தயவு செய்து அதைப் பகிர வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

ஏனெனில், எங்களுக்குத் தெரிந்தவரை, அவர்கள் சமூக ஊடகங்கள் வழியாக போலிச் செய்திகளைப் பெறுகிறார்கள். பிறகு அதை மற்றவர்களுக்குப் பகிர்கிறார்கள். இது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது, அச்சத்தை அதிகரிக்கிறது," என்று அவர் கூறினார்.

லெஸ்டரில் உள்ள ப்ரூயின் தெருவைச் சேர்ந்த யூசுஃப், அமைதியின்மை தொடர்பாக தண்டனை பெற்ற இருவரில் ஒருவர்.

லெஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், யூசுஃப் தான் வசித்த இடத்திற்கு அருகில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பான "சமூக ஊடக பதிவுகளால் தன்னுள் தாக்கம்" ஏற்பட்டதாகவும், அதுகுறித்து "வருத்தமடைந்ததாகவும்" கூறினார்.

அவருக்கு அடுத்த 18 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

யூசுஃபிற்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட், "இந்த நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது. நம் நகரத்திற்கும் சமூக உறவுகளுக்கும் இது அவமானத்தை ஏற்படுத்துகிறது," என்று குறிப்பிட்டார்.
 

கைதுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து இந்த நகரில் கலவரம் தொடர்பாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
webdunia

இதில் 2 பேர் சனிக்கிழமையும் 18 பேர் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டனர்.

"பல மாதங்களுக்கு இல்லையென்றாலும், பல வாரங்களுக்காவது கைதுகள் தொடரலாம்" என்று நிக்சன் கூறினார்.

"எங்களிடம் சுமார் 50 பேர் கொண்ட புலனாய்வுக் குழு உள்ளது. அவர்கள் வெவ்வேறு கூறுகள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர். நாங்கள் மக்களின் தோற்றங்களை அடையாளம் காணத் தொடங்குகிறோம்," என்று கூறினார்.

லெஸ்டரின் இல்லிங்வொர்த் வீதியைச் சேர்ந்த 20 வயதான ஆமோஸ் நோரோனா, சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆயுதம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு திங்கட்கிழமையன்று அவருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லெஸ்டரில் ஹோம்வே சாலையைச் சேர்ந்த 31 வயதான லுக்மான் படேல், ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் இனரீதியாக மோசமான துன்புறுத்தலைச் செய்ததாகவும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என்று அவர் கூறுகிறார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட லுக்மான் படேல் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு லெஸ்டரில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடையிலான இரவு முழுவதும் "செயல்திறன் மிக்க ரோந்துப் பணிகளை" தொடர்ந்ததாகவும் புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நிக்சன், வார இறுதியில் அதிகாரிகள் "குறிப்பிடத்தக்க அளவிலான மூர்க்கத்தை" எதிர்கொண்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாக அறியப்பட்டதாகவும் இருப்பினும் காயங்கள் எதுவும் பெரிதாக இல்லையென்றும் கூறினார்.
webdunia

சனிக்கிழமையன்று நடந்த முக்கியமான பதற்றநிலை ஒரு போராட்டத்தால் தூண்டப்பட்டதாகவும் இவ்வளவு பேர் இதில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

"ஒரு கட்டத்தில் நாங்கள் 200 பேர் இருந்தனர். மறுபுறம் 600 முதல் 700 பேர் இருந்தனர். ஆகவே, மொத்தமாக சுமார் 800 முதல் 900 பேர் வரையிலான நபர்கள் மிகவும் நெருக்கமான பகுதியில் இருந்தனர். சுமார் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். எங்களுடைய அதிகாரிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் அற்புதமான பணியைச் செய்துள்ளதாக நான் கருதுகிறேன்," என்றார்.

ஞாயிற்றுக்கிழமை சுமார் 100 பேர் பங்கேற்ற மற்றொரு போராட்டம் நடந்தது. ஆனால், திங்கட்கிழமை இரவு முழுவதும் நிலைமை அமைதியாக இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பர்மிங்ஹாமை சேர்ந்த சிலர் உட்பட நகரத்திற்கு வெளியிலிருந்து வந்திருந்தவர்களும் அடங்குவர்.

"லெஸ்டருக்கு வெளியே உள்ளவர்கள் சமூக ஊடகங்களுக்குச் சென்று, 'இதில் நாம் உடன் நிற்போம், லெஸ்டருக்கு பயணிப்போம்' என்று பேசுவதாக நான் நினைக்கிறேன்," என்கிறார் நிக்சன்.

"இதன்மூலம் அவர்கள் லெஸ்டருக்கு வெளியிலிருந்து இந்த மோதலில் சேர்வதற்கு மக்களைத் தூண்டுகிறார்கள். இது சமூக ஊடக பதிவுகளால் தூண்டப்படுகிறது," என்கிறார்.

நகரத்திலுள்ள சமூகத் தலைவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து அமைதியைக் காக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

நகர மேயர் சர் பீட்டர் சோல்ஸ்பி, "நாங்கள் லெஸ்டரில் உள்ள நல்ல சமூக உறவுகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். ஆனால், நாம் அந்த விஷயத்தைப் பொறுத்தவரை முழு மனநிறைவை அடையமுடியாது. அந்த நல்லுறவை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இது செயல்பாட்டில் தான் உள்ளது. இங்கே செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது," என்று கூறினார்.

'இதற்கு முடிவுகட்ட வேண்டும்"

இந்து, முஸ்லிம் சமூகங்களின் கூட்டறிக்கையைப் படித்துக் காட்டிய பிரதீப் கஜ்ஜர் என்பவர், "இந்த அற்புதமான நகரத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு மதத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாக இந்த நகரத்திற்கு வந்தோம், ஒன்றாக ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொண்டோம். கூட்டாக இந்த நகரத்தை பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக மாற்றினோம்."

"சிந்தனை, நடத்தை ஆகிய இரண்டிலும் வெளிப்படும் ஆத்திரமூட்டல் மற்றும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ஒற்றுமையாக அழைப்பு விடுக்கிறோம்," என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்