Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய 'சிலிக்கான் பள்ளத்தாக்கின்' பெருமையைக் கெடுக்கும் இந்து-முஸ்லிம் பிரிவினை அரசியல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (09:51 IST)
கடந்த வாரம் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர் ஆளும் தரப்புக்கு ஒரு அசாதாரணமான வேண்டுகோளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
 
அவரது பெயர் கிரண் மஜும்தார் ஷா. முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோகானின் தலைவர். 6.4 கோடி மக்கள் வசிக்கும் கர்நாடக மாநிலத்தில் " அதிகரித்துவரும் வரும் மதப் பிளவைச் சரிசெய்ய" ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசிடம் வலியுறுத்தினார். கிரணின் நிறுவனம், இந்தியாவின் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையமான கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ளது.
 
கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று அடிப்படைவாத இந்துக் குழுக்களின் கோரிக்கைகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், கிரணின் கோரிக்கை வந்திருக்கிறது. ஹலால் முறையில் விலங்குகளைக் கொல்லும் முஸ்லிம் கடைகளில் விற்கப்படும் இறைச்சியை வாங்க வேண்டாம் என்று இந்த குழுக்கள் இந்துக்களை வலியுறுத்துகின்றன.
 
இப்போது பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யவும், முஸ்லிம் மாம்பழ விற்பனையாளர்களைப் புறக்கணிக்கவும் இதே குழுக்கள் கோருகின்றன.
 
இது ஹிஜாப் விவகாரத்தில் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே, ஹிஜாப் அணிந்து முஸ்லிம் பெண்கள் கல்லூரிகளில் நுழைவதைத் தடை செய்யும் அரசாணையால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. ஒரு நீதிமன்றம் இந்த உத்தரவை உறுதி செய்திருக்கிறது. பல மாணவர்கள் தேர்வுகளையும் வகுப்புகளையும் புறக்கணித்து தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
 
சுமார் 13% முஸ்லிம் மக்கள் வசிக்கும் கர்நாடகத்தில் பசுக்களைக் கொல்லவும் விற்பனை செய்யவும் அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கும் திட்டமும், 18ஆம் நூற்றாண்டு மைசூர் முஸ்லீம் ஆட்சியாளரான திப்பு சுல்தானைப் பெருமைப்படுத்தும் பாடத்தை நீக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்கான பிரதமர் நரேந்திர மோதியின் தேசியவாதக் கொள்கை கொண்ட அரசின் முயற்சியாக விமர்சகர்கள் இதைப் பார்க்கும் நிலையில், ​​இந்த நகர்வுகள் பிளவுபடுத்தும் கருத்துகளைத் தோற்றுவித்திருக்கின்றன. ஒப்பீட்டளவில் இந்தியாவின் வளமான மாநிலங்களில் ஒன்றின் பிம்பத்தை இது கெடுக்கும் அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் அஞ்சுகிறார்கள்.
 
"கர்நாடகம் எப்போதும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை கொண்டது" என்று கிரண் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் [நகரம்] வகுப்புவாதக் களமாக மாறினால், அது "அதன் உலகளாவிய முதன்மை என்ற பெருமையை அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.
 
அவருடைய கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியவை. கர்நாடகாவின் பொருளாதார வெற்றி பெங்களூரில் இருந்தே மாநிலத்தின் பிற பகுதிகளுக்குப் பாய்கிறது. மாநிலத்தின் வருவாயில் 60% க்கும் அதிகமானது சுமார் ஒரு கோடி மக்களைக் கொண்ட இந்த கலகலப்பான மற்றும் பரபரப்பான நகரத்திலிருந்தே பெறப்படுகிறது. இது 13,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது.
 
இந்தியாவின் 100 யூனிகார்ன் நிறுவனங்களில் - பட்டியலிடப்படாத 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டைக் கொண்டவை - சுமார் 40 சதவிகிதம் இங்குதான் உள்ளன. பெங்களூரின் தயவால்தான், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 41 சதவிகித பங்களிப்பை கர்நாடகத்தால் செய்ய முடிகிறது.
 
இருப்பினும் பெங்களூரு - பொதுவாக கர்நாடகம் - வகுப்புவாதத்தால் கடந்த காலங்களில் மத வன்முறையைக் கண்டிருக்கிறது. தகவல்-தொழில்நுட்பத் தொழில் பெங்களூரின் "உள் மோதல்களை" ஒதுக்கிவிட்டு, நகரத்தின் பிம்பத்தை மாற்றுகிறது என்று நகரின் தேசிய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியரான நரேந்திர பானி கூறுகிறார்.
 
தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வளருவதற்கான தடத்தை விரிவுபடுத்தும் மோதியின் முயற்சிக்கான மையமாக கர்நாடகம் இருக்கிறது. ஐந்து தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாக கட்சி ஆட்சியைப் பிடித்தது இந்த ஒரே மாநிலத்தில்தான். சாதிகள், மொழிவாதக் குழுக்கள், மதங்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்ட மாநிலத்தில், பாஜக தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையான நாடாளுமன்ற இடங்களைப் பிடித்திருக்கிறது.
 
கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கும் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் பாஜக தீவிரமான இந்து தேசியவாத அரசியலைப் பரப்புகிறது. பா.ஜ.க.வின் சித்தாந்த அடித்தளமான ஆர்.எஸ்.எஸ். இங்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்துக் குழுக்கள் மதுக்கடைகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களைத் தாக்கி கலாசார கண்காணிப்பு முறையைத் திணிக்க முயன்றன. முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களைத் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக இந்துக் குழுக்களால் கூறப்படும் "லவ் ஜிஹாத்"-க்கு எதிரான இயக்கங்களை நடத்துகின்றன.
நீண்ட காலமாக கர்நாடகத்தில் தேர்தல் அரசியல் சாதிய சார்புநிலையால் தீர்மானிக்கப்பட்டு வந்தது. 2008-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் ஆட்சியில் அமரவைத்த எடியூரப்பா, மாநிலத்தின் வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட லிங்காயத்துகள் மற்றும் பிற பின்தங்கிய சாதிகளின் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கினார்.
 
ஆனால் லிங்காயத்துகளின் ஒரு பிரிவினர் தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து, தனி நம்பிக்கை கொண்ட மதத்தவராகக் கருத வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
 
"அழுத்தம் அதிகரித்ததால், பாஜக இப்போது வேறு வகையான அரசியலை உருவாக்க முயல்கிறது. அது இந்து தேசியவாதம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் வாக்காளர்களைக் கவர முயற்சிக்கிறது" என்று கர்நாடகாவில் இருந்து வந்த ஒரே இந்தியப் பிரதமரான ஹெச்.டி.தேவ கவுடாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுகதா ஸ்ரீனிவாசராஜு கூறுகிறார்.
 
61 வயதான பொம்மை, கடந்த ஆண்டு எடியூரப்பாவிடம் இருந்து முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவரது அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசின் பாதித் துறைகள் முறையாகச் செயல்படவில்லை என்று ஓர் உள் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக புலனாய்வு இணையதளமான தி ஃபைல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
இன்னொருபுறம் ஊழலும் வளர்ச்சியைத் தடுக்கிறது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு திட்ட மதிப்பீட்டில் 40% வரை லஞ்சமாக கொடுக்க வேண்டியிருப்பதாக பிரதமர் மோதிக்கு அரசின் ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியூட்டும் கடிதம் ஒன்றை எழுதினார்கள்.
 
மேம்பாட்டுக்கான பணம் செலவழிக்கப்படவில்லை, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் என பல புகார்கள் உள்ளன.
 
அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் வரவுள்ளது. "இந்து தேசியவாதம் மட்டுமே அரசு பயன்படுத்தப்போகும் ஒரே சீட்டாகத் தோன்றுகிறது. பெரிய சாதனைகள் என்று அவர்கள் காட்டுவதற்கு எதுவும் இல்லை" என்று பெங்களூரைச் சேர்ந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான சமூகவியல் பேராசிரியர் சந்தன் கவுடா கூறினார்.
 
கிரண் ட்விட்டரில் பதிவிட்ட மறுநாள் "அமைதி மற்றும் ஒழுங்கைப் பேண ஒத்துழைக்க வேண்டும்" என்று மக்களுக்கு முதலமைச்சர் பொம்மை வேண்டுகோள் விடுத்தார்.
 
பொம்மையின் கட்சிக்குள்ளும் உரசல்கள் உண்டு. குறைந்தது இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்துக் குழுக்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். இந்துக் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளை தடை செய்வது "தீண்டாமையைத் தவிர வேறில்லை... இது ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை" என்று பிபிசி ஹிந்தியிடம் ஏ.எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
 
"கோவில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம்" என்று அனில் பெனகே கூறினார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இந்துக்களும் இறைச்சி வாங்குவதற்காக முஸ்லிம்களின் இறைச்சிக் கடைகளில் கூடினர்.
 
இவை நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் இன்னும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. "கர்நாடகாவின் அரசியலை மத ரீதியாகத் துருவப்படுத்துவது என்பது இரண்டு தசாப்தங்களாக நடக்கும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். பல ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள், பெரும்பாலான அறிவுஜீவிகள் மற்றும் வணிகர்கள் அமைதியாக உள்ளனர். அல்லது கவனமாகப் பேசுகின்றனர். அவர்கள் தங்களது கருத்துகளைக் கூறும்போது போலியாக நடுநிலை வகிக்காமல், துணிந்து பேச வேண்டும்" என்கிறார் ஸ்ரீநிவாசராஜு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments