இரான் அரசு வெளியிட்ட தரவுகளை விட அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என பிபிசி பாரசீக மொழி சேவை நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இரான் அரசைப் பொறுத்தவரை, ஜூலை 20ம் தேதி வரை 42,000 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு சுகாதார துறை 14,405 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசாங்கம் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 2,78,827 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வேளையில் அங்கு 451,024 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரானும் ஒன்று. கடந்த சில வாரங்களாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்குப் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஜனவரி 22ம் தேதி என பிபிசியிடம் வழங்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பிப்ரவரி மாதம்தான் கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக முன்பு இரான் கூறி இருந்தது.
இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியது முதல் அந்நாட்டில் வெளியிடப்படும் அதிகாரபூர்வ தரவுகள் மீதான சந்தேகம் பல நிபுணர்களுக்கு இருந்தன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாற்றி மதிப்பிட்டு வெளியிடுகின்றனர் என உள்ளூர் அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் உண்மையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கணிக்கப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டே அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பிபிசிக்கு எங்கிருந்து தரவுகள் கிடைத்தன?
இரானில் உள்ள மருத்துவமனைகளில் தினமும் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களின் பெயர், வயது, பாலினம், அறிகுறிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதி, எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர் போன்ற அனைத்து தகவல்களும் பெயர் குறிப்பிட முடியாத அமைப்பு மூலம் கிடைத்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் இந்த நெருக்கடி நிலையிலும் ''அரசியல் ஆதாயங்களுக்காகப் பொய்யான தரவுகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவே இந்த உண்மையான தரவுகள் பிபிசிக்கு வழங்கப்பட்டுள்ளது'' என அந்த ரகசிய ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பிபிசிக்கு கிடைத்த இந்த தரவுகள் உண்மையில் இரான் அரசங்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளிடம் இருந்து ரகசியமாக பெறப்பட்டதா? அல்லது வேறு எந்த வழியில் பெறப்பட்டது என்பதை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
இரான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட இந்த ரகசிய ஆதாரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதே போல ஜூலை மாதம் வரை இரானின் சராசரி உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
தரவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இரான் தலைநகர் டெஹ்ரானில் 8,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பக் கட்டத்தில் வைரஸ் தொற்று அதிகம் பரவிய கோம் நகரில் 1,419 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. அதாவது இந்த நகரின் மொத்த மக்கள் தொகையில் 1000 பேரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரானில் வசிக்கும் 1,916 வெளிநாட்டினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் ஆஃப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பல குடியேறிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
பிபிசிக்கு கிடைத்த ரகசிய தரவுகளைப் பொறுத்தவரை சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட எண்ணிக்கையை விட ஆரம்பக் கட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளன.
மார்ச் 3ம் வாரம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வதரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட ஐந்து மடங்கு அதிகம். மார்ச் மூன்றாம் வார இறுதியில் இரானின் புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது, அதன் பிறகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறைந்துள்ளன.
ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே மாத இறுதியில் மீண்டும் கொரோனா பாதிப்புகளும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
பிபிசியிடம் கிடைத்த ரகசிய தரவுகளின்படி ஜனவரி 22ம் தேதி கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதம் முழுவதுமே இரானில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிவந்தன. உள்ளூர் செய்தியாளர்கள் அளித்த தகவல்கள், மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கைகள் என எதையுமே பொருட்படுத்தாமல் தொடர்ந்து இரான் அரசாங்கம் கொரோனா குறித்த நிலவரத்தை வெளிப்படையாக ஏற்க மறுத்தது.
இரான் அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரை கண்டறிந்ததாக அறிவித்த பிப்ரவரி 19ம் தேதி அன்று வரை கொரோனாவால் 52 பேர் உயிரிழந்துவிட்டனர் என பிபிசியிடம் கிடைத்த ரகசிய ஆதாரங்கள் கூறுகின்றன.
கொரோனா வைரஸ் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படையாக அறிவிக்கக்கூடாது என இரான் சுகாதார துறைக்கு, இரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தன என்று பிபிசியிடம் நேரடியாக இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இறப்புகள்: உண்மையை மறைக்கிறதா இரான்?
கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஒப்புக்கொள்வதற்கே இரான் சுகாதாரதுறை அதிகாரிகள் தயக்கம் காட்டியுள்ளனர். கோம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர்களின் சகோதரர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளார். அப்போது உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என மருத்துவர்களான சகோதரர்கள் மொஹம்மத் மொலாயி மற்றும் அலி மொலாயி ஆகிய இருவரும் வலியுறுத்தினர்.
அதன்படி தங்கள் சகோதரருக்குப் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன ஆனால் யாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே இரான் அரசு தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இரானில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏன் மறைக்கப்பட்டது?
1979 ஆம் ஆண்டு நடத்த இஸ்லாமிய புரட்சியின் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடி அதன் மூலம் இரான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் திட்டமிட்டன.
மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி, தேர்தலுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்க பலர் கொரோனா வைரஸை காரணம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.
2018 நவம்பர் மாதம், ஒரே இரவில் பெட்ரோல் விலை அதிகரித்ததால் நாடு முழுவதும் பல போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. ஒரு சில நாட்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவரி மாதம் இரானின் இரண்டாவது அதிகாரமிக்க தலைவரான காசெம் சுலேமானீ அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதன் பிறகு எதிர்பாராத விதமாக டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுக்ரேனிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் மேற்கொண்ட 176 மக்களும் உயிரிழந்தனர்.
இரான் சுகாதாரத் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி நவுரோல்தின் பிபிசியிடம் பேசுகையில், ''வேலையிழப்பு மற்றும் ஏழை மக்களின் நிலை குறித்து இரான் அரசாங்கம் அஞ்சியது, இதுவே உண்மைகளை மறைக்கக் காரணம்'' என கூறினார்.