Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அரசின் இழப்பீடு எவ்வளவு? 10 முக்கிய தகவல்கள்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:52 IST)
மத்திய அரசின் "பாரத்மாலா பிரயோஜனா தீட்டத்தின்கீழ்" சென்னை முதல் சேலம் வரை 277.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10,000 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு பிப்ரவரி 25 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.



விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் வழியாக இந்த சாலை செல்கிறது என்பதால், இந்தத் திட்டத்துக்கு எதிராக சமீபத்தில் பல போராட்டஞ்களும் அவற்றைத் தொடர்ந்து கைதுகளும் நிகழ்ந்துள்ளன.

இந்தநிலையில் இந்த திட்டத்திற்காக நிலம் வழங்கிய வீட்டுமனைதாரர் மூன்று பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாவும், அதில் பசுமை வீடு கட்டுவதற்கான நிதியையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனிடையே இன்று, வெள்ளிக்கிழமை, (ஜூன் 22) இந்தத் திட்டம் தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ரா.பாஜிபாகரே வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள 10 முக்கியத் தகவல்கள் பின்வருமாறு.

சேலம் - சென்னை பசுமை வழி விரைவுச் சாலைத் திட்டத்துக்காக நகர்ப்புறங்களில் சந்தை மதிப்பைவிட குறைந்தபட்சம் இரண்டு மடங்கு மற்றும் கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டரை மடங்கிலிருந்து நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும்.
நிலம் வழங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ஹெக்டேர் ஒன்றுக்கு 21.52 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சாலைப் பணிக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் 366.625 ஹெக்டேர் தனியார் நிலம், சுமார் 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 853 பட்டாதாரர்களுக்குச் சொந்தமான 194.856 ஹெக்டேர் நிலம் அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே செய்திக்குறிப்பின் இரண்டாம் பக்கத்தில் 20 கிராமங்களில் 186 ஹெக்டேர் தனியார் நிலம், 46 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம், 16 ஹெக்டேர் காப்புக் காடுகள் என மொத்தம் 248 ஹெக்டேர் கையகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் எது சரியான தகவல் என்று பிபிசி தமிழ் சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் அந்த சாலையின் அகலம் 110 மீட்டர் என்று கணக்கிடப்பட்டதால் அதற்கு 366.625 ஹெக்டேர் நிலம் தேவை என்று கணக்கிடப்பட்டதாகவும், தற்போது 70 மீட்டர் அகலம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் 248 ஹெக்டேர் நிலம் மட்டுமே சேலம் மாவட்டத்தில் மொத்தமாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேற்கண்ட பட்டாதாரர்களில் 90% பேர் நில அளவைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், 10% பேர் மட்டுமே அதிக இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. இதுவரை ஏறத்தாழ 18 கிலோ மீட்டர் சாலைக்கான நிலம் அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்பவர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 வீதம் ஆண்டுக்கு 36,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு மீள் குடியேற்ற உதவித்தொகையாக ரூபாய் 50,000 மற்றும் இடம் பெயர்வதற்கான உதவித்தொகையாக ரூபாய் 50,000 வழங்கப்படும்.

இடம் பெயர நேரிடும் சுயதொழில் புரிவோர் அல்லது கைவினைஞர்களுக்கு ரூபாய் 25,000 இழப்பீடு வழங்கப்படும். நிலம் கையகப்படுத்தும்போது மாட்டுக்கொட்டகை பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வழங்கப்படும்.

வேளாண் நிலங்களில் சாலை அமைப்பதற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றுக்கு ரூபாய் அதிகபட்சமாக 50,000 இழப்பீடு வழங்கப்படும். ஒட்டு ரக மாமரத்துக்கு அதிகபட்சமாக 30,000 ரூபாய், நாட்டு ரக மாமரத்துக்கு அதிகபட்சமாக 13,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

ஒரு கொய்யா மரத்துக்கு அதிகபட்சமாக 4,200 ரூபாய், ஒரு நெல்லி மரத்துக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய், பலா மரம் ஒன்றுக்கு 9,600 ரூபாய், புளிய மரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 9,375 ரூபாய், பாக்கு மரம் ஒன்றுக்கு ரூபாய் அதிகபட்சமாக 8,477 மற்றும் ஒரு பனை மரத்துக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments