Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத் ஜோடோ: ராகுல் காந்தியை வரவேற்க சாவர்க்கர் படம் வைக்கப்பட்டது ஏன்?

BBC
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:52 IST)
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் விடுதலை போராட்ட வீரர்களுடன் சாவர்கரின் படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதில் கன்னியாகுமரி முதல் ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை சுமார் 3500 மீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி அவரை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் அபுல் கலாம் அசாத், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் வீர் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றிருந்தது.
இந்த பேனர் வைரல் ஆனதை அடுத்து சாவர்க்கர் படம் இருந்த இடத்தில் மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கேளராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

'பேனரை அச்சிட்டவர்கள் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருக்கலாம்'

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் கேரள ஒருங்கிணைப்பாளர் கே. சுரேஷ், "இந்த பேனரை அச்சிட்ட நபர் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்திருக்கலாம். இதை வேண்டுமென்றே பிரிண்ட் செய்திருக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் பேனரில் சாவர்க்கரின் படத்தை நிச்சயம் கேட்க மாட்டார்கள். இதுகுறித்து நாங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். பேனருக்கு பொறுப்பான உள்ளூர் காங்கிரஸ் தொண்டர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்." என்று தெரிவித்தார்.

மேலும் இது ஒரு தவறு என்று கூறிய சுரேஷ், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் சாவர்க்கரை தெரியும் என்றார்.

'பேனரை நான் சரி பார்க்கவில்லை'

இடைநீக்கம் செய்யப்பட்ட சுரேஷ் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "கடந்த இரண்டு வாரங்களாக நான் பார்த் ஜோடோ பணியில் ஈடுபட்டு வருகிறேன். 88 அடி நீளமுள்ள பேனர் இரவு 9 மணியளவில் பிரிண்ட் செய்ய கொடுக்கப்பட்டது. அதில் 22 படங்கள் இருந்தன. பேனரின் பிரதியை சரிபார்க்க எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் நான் அதை சரியாக பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.


மேலும், இணையத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் என டைப் செய்யப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டன. என்னால் அதை சோதிக்க முடியவில்லை. நான் அதை கவனிக்கவில்லை. தவறு என்மீது தான். நான் அந்த பேனரை வைக்கும்போது யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். அதன்பிறகுதான் அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இல்லையென்றால் இத்தனை பெரிதாக மாறியிருக்காது."

அதேபோல தவறு கண்டறியப்பட்டவுடன் சாவர்க்கரின் புகைப்படம் மகாத்மாவின் படத்தை வைத்து மறைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார் சுரேஷ்.

"பிரச்னை என்று தெரிந்தவுடன் நான் சாவர்க்கரின் படத்தை மகாத்மாவின் படத்தை கொண்டு மறைத்து விட்டேன். ஆனால் கட்சித் தலைவர்களின் ஆணைப்படி அந்த பேனர் அகற்றப்பட்டுவிட்டது. அதன் விலை 9 ஆயிரம் ரூபாய். கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து நான் கவலை கொள்ளவில்லை ஏனென்றால் நான் தவறு செய்துள்ளேன். எனது கவனக் குறைவால் நடந்த தவறுக்கு கட்சியிடமும் தொண்டர்களிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில், "சாவர்க்கரின் அருமை காங்கிரஸில் உள்ள தொண்டருக்கு புரிந்துள்ளது" என்பது போன்ற கருத்துக்களை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

சாவர்க்கர் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸின் பேனரில் அவரின் படம் இடம் பெற்றதால் இது சமூக வலைத்தளத்தில் பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிராங் வீடியோ செய்த நபருக்கு விழுந்த பளார்!