ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபரும், கனடா பிரதமரும் மோதிக் கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கி விமரிசையாக நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா என 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது பல்வேறு நாட்டு தலைவர்களும் தனியாக இருநாட்டு உறவுகள் குறித்து சந்தித்து பேசிக் கொண்டனர். அதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனாவின் தலையீடு உள்ளதாக ஜின் பிங்கிடம் ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த வீடியோ திடீரென சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு தலைவர்கள் தனியாக பேசும் விஷயம் இப்படி பொதுவெளியில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதை கனடா தரப்பில்தான் லீக் செய்து விட்டதாக ஜி ஜின் பிங் குற்றம் சாட்டி பேசியுள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.