உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக 70 போர் விமானங்கள் வழங்குவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக வேறு நாடுகள் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான பண, ஆயுத உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளன. ஸ்லோவேகியா 12 விமானங்களையும், பல்கேரியா 30 விமானங்களையும், போலந்து 28 விமானங்களையும் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவும், கனடாவும் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன.