கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து அடுத்த போப் யார் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்தவ மக்கள் காத்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக வாட்டிகன் திருச்சபையின் போப் விளங்கி வருகிறார். தற்போது போப் ஆக இருந்து வந்த பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமான நிலையில் அடுத்த போப் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான கார்டினல்கள் கான்கிளேவ் மாநாடு மே 7ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக கார்டினல்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 135 கார்டினல்கள் போப் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். இதில் அதிக கார்டினல்களால் முன்மொழியப்படும் ஒரு கார்டினல் போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.
இந்த போப் ஆண்டவருக்கான போட்டியில் ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் ஏர்டோ, பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் ஆண்டோனியோ டாக்லே, இத்தாலியை சேர்ந்த கார்டினல் பியட்ரோ பரோலின் உள்ளிட்ட பலருக்கு ஆதரவுகள் உள்ளது. மேலும் ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கறுப்பின கார்டினலான பீட்டர் டர்க்சனும் இந்த பரிந்துரையில் உள்ளார்.
இதுவரை வாட்டிகன் தலைமை பீடத்தில் பெரும்பாலும் ஐரோப்பிய போப் ஆண்டவர்களே அதிகாரம் செலுத்தி வந்துள்ள நிலையில், இதுவரை ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் யாரும் போப் ஆனதில்லை என்பதால் பீட்டர் டர்க்சன் குறித்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க கார்டினல்களின் ஆதரவு இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலினுக்குதான் இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் மே 7ம் தேதி கான்கிளேவ் முடியும்போது புதிய போப் யார் என்பது தெரியவரும். அதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Edit by Prasanth.K