போப்பாண்டவர் மறைவை அடுத்து, இன்றும் நாளையும் தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார் என்பதும், 88வது வயதில் அவர் காலமானதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், போப்பின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச்சடங்கின்போதும் ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில், தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், குறிப்பிட்ட நாட்களில் எந்தவித கொண்டாட்டங்களும் தமிழக அரசின் சார்பில் இருக்காது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியா முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தனியாக இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.