சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145% வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125% வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும், எந்த நடவடிக்கையையும் எதிர்க்கும் வகையில் தங்களை தயாராக வைத்திருப்பதாகவும் சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரிவிதிப்பை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபத்தில், அவர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு, சீனா தவிர அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். அதே நேரத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரி விதித்ததைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடி நடவடிக்கையாக 125% வரி அறிவித்துள்ளது.
இதற்கிடையில், “அமெரிக்கா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிர் நடவடிக்கை எடுப்போம்; பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை; இறுதிவரை போராடுவோம்” என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.