தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே. என். ரவிச்சந்திரனின் வீட்டில் மூன்று நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நேற்று முடிவடைந்ததாகத் தகவல்.
சோதனையின் முடிவில், அவரது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும், பின்னர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென அவருக்கு நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.