உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாத காலமாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது 800 உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா – உக்ரைன் இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போரால் இருதரப்பு ராணுவ வீரர்களுமே தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் அங்கு உருக்காலை சுரங்கத்தில் பலர் பதுங்கியிருந்தனர். அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் உக்ரைன் ராணுவத்தினர் சரணடைய மறுத்து சண்டையிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உருக்காலையில் இருந்து 800 வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 16ம் தேதியிலிருந்து 1730 உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கிழக்கு உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.