உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் பிற நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்புள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
சமீபத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தாய், குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரஷ்யா உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த போரில் உக்ரைனுக்கு போர் ஆயுத உதவிகளை பிற நாடுகள் வழங்குவதால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் எழுந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “நல்ல எண்ணத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லாவிட்டால், அது பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது” என்று தெரிவித்துள்ளார்.