அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை அலாஸ்காவில் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மறுபுறம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என்று புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "சதித்திட்டங்கள் மூலம் அமைதி முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் சீர்குலைக்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் விரைவில் அமைதியான தீர்வு எட்டப்படும் என்றும், அதுவரை உக்ரைனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அமைதிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் புதின் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.