175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்த விபத்தில் 38 பேர் பலியானதாக வெளிவந்த செய்தி தென்கொரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஒரு விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி சுவற்றின் மீது மோதியதாகவும், அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 38 பேர் பலியானதாகவும், விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் பாதுகாப்பாக மீட்பு படையினரால் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் இருந்து திடீரென விலகி, அருகிலிருந்த சுவர் மீது மோதியது. இதனால் விமானம் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் இந்த நிகழ்வை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 38 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.