உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை இலங்கை அரசு நடுக்கடலில் போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் – இலங்கை இடையே மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்கனவே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகு, வலைகளை நாசம் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இலங்கை அரசு பயன்படுத்திய பழைய பேருந்துகளை நடுக்கடலில் மூழ்கடித்து வருகிறது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவே அவ்வாறு செய்வதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் இவ்வாறாக மூழ்கடிக்கப்படும் பழைய பேருந்துகளால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகள் சேதமடைவது போன்றவை ஏற்படும் என தமிழக மீனவர்கள் இலங்கையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.