தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினமும் 15 ஆயிரம் பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்ற முடிவு அபத்தமானது என பாஜக மற்றும் அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறப்பதால் கொரோனா அதிகரிக்காது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்
திருச்சியில் மணப்பாறை அருகே மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அதன் பின் செய்தியாளர்களுக்கு திருநாவுக்கரசர் எம்பி பேட்டி அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்றும், அவ்வாறு கொண்டு வந்தால் காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்கும் என்றும் தெரிவித்தார்
மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும், மேலும் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு தடுப்பூசிகளை அதிக மக்களுக்கு செலுத்துவதற்காக பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.