இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானே காரணம் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்கள் முன்னதாக இலங்கையில் கரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்தது. தொடர்ந்து அத்தியாவசிய உணவுபொருட்களுக்குமே பஞ்சம் எழுந்த நிலையில் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் இலங்கை அரசே கவிழும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது. நேற்று புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றனர். இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே “கடந்த இரண்டரை ஆண்டுகளில் கொரோனா தொற்று, கடன் சுமை உள்ளிட்ட பெரிய பிரச்சினைகளை சந்தித்துள்ளோம். மேலும் எங்கள் பக்கத்திலும் சில தவறுகள் உள்ளன.
அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அவர்களின் வலி, கோபம் நியாயமானது. கடந்த காலத்தில் குறைகள் இருந்தாலும் சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது பொறுப்பு. அந்த பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.