சீனாவில் பெண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து திருமணத்திற்காக பெண்களை கடத்துவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்த சீனா மக்கள் தொகையை குறைப்பதற்காக எடுத்த முடிவுகள் பின்விளைவை சந்தித்துள்ளன. சீனாவின் பிறப்பு விகிதம் திடீரென குறைந்த அதேநேரம் சீனாவில் எதிர்காலத்தில் இளைஞர்கள் குறைவாகவும், முதியவர்கள் அதிகமாகவும் ஆவதற்கான அபாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சீனர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், காதலிக்கவும் அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சீன பல்கலைக்கழகங்களில் காதல் பாடங்கள் நடத்தப்படுவதுடன், சீன நிறுவனங்கள் ஊழியர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடவும், சுற்றுலா செல்லவும் சிறப்பு அனுமதிகளை வழங்குகிறது. ஆனால் சீனா தற்போது புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் பெண்களுக்கான பற்றாக்குறை.
சீனாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சீன ஆண்கள் பலருக்கு திருமணம் செய்து கொள்ள பெண்ணே கிடைக்காத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி சில தரகர்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் சீன இளைஞர்களை கவர்கிறார்கள். அண்டை நாடுகளான வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து சீன ஆண்களுக்கு மணமுடிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் வங்கதேசத்திற்கு சுற்றுலா செல்வது போல செல்லும் சீன இளைஞர்கள் அங்குள்ள பெண்களை தரகர்கள் மூலம் திருமணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள சீன தூதரகம், வங்கதேசம் செல்லும் சீன இளைஞர்கள் அங்குள்ள பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Edit by Prasanth.K