புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் உக்ரைன் மீது புத்தாண்டு இரவே ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். உக்ரைனும் நேட்டோ நாடுகளின் பொருளாதார, ஆயுத உதவிகளை பெற்று ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
11 மாதங்களாக நடைபெறும் இந்த போரில் சுமூக பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று 2023 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டின. உக்ரைனிலும் மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் புது வருடம் பிறந்த அரை மணி நேரத்திற்குள் உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைனையும், ஆதரவு நாடுகளையும் கோவப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.