Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

stalin
, ஞாயிறு, 1 ஜனவரி 2023 (10:28 IST)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34% என இருந்த அகவிலைப்படி இன்று முதல் அதாவது ஜனவரி 1 முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது
 
இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்
 
இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது”
 
மேலும் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் - செலவினம் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது
 
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!