இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு துணை போவதாக பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்த எஃப்.ஏ.டி.எஃப் நிதி அமைப்பு நிரந்தரமாக நிதி உதவி அளிக்க தடை விதிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து ஐ.நாவால் பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்ட நபர்களில் 88 நபர்கள் மற்றும் அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்வதாக அறிவித்துள்ளது. அந்த 88 பேரில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக தாவூத் இப்ராஹிமை இந்தியா தேடி வரும் நிலையில் பாகிஸ்தானின் பட்டியலில் தாவூத் பெயர் இடம் பெற்றுள்ளதால் அவர் பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகம் எழ தொடங்கியது. இந்நிலையில் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லையென்றும், ஐநா பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை தவறாக பலர் புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.