கொரோனாவை தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ள நிலையில் கொரோனாவிற்கு ஓமியோபதி மருந்தை குஜராத் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் மும்முரமாய் இறங்கியுள்ளன. இந்நிலையில் குஜராத் அரசு ஆர்கனிசம் ஆல்பம் 30 என்ற ஓமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக மக்களுக்கு அளித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தில் ஆயுஷ் மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், எனவே அயுஷ் மருந்துகள் குறித்து அதன் செயல்திறன் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 99.69 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறிகள், பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.
எனினும் இந்த மருந்தின் திறன் குறித்து ஆய்வு செய்வது அவசியம் என ஓமியோபதி மருத்துவர்களே பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்தின் தன்மை நிரூபிக்கப்படாததால் தனியார் ஆய்வகங்கள் மூலம் இதை சோதனைக்கு உட்படுத்த குஜராத் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.